/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அகழியை எளிதாக கடக்கும் காட்டு யானைகள் ஆழப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
/
அகழியை எளிதாக கடக்கும் காட்டு யானைகள் ஆழப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
அகழியை எளிதாக கடக்கும் காட்டு யானைகள் ஆழப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
அகழியை எளிதாக கடக்கும் காட்டு யானைகள் ஆழப்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 18, 2024 10:56 PM

ஆனைமலை:ஆனைமலை அருகே யானைகள் நடமாட்டத்தைக்கட்டுப்படுத்த, ஆறு லட்சம் ரூபாய் செலவில், மூன்று கி.மீ., துாரத்துக்கு அகழி வெட்டப்பட்டுள்ளது. போதிய ஆழம் இல்லாததால், அதை கடந்து யானைகள் எளிதாக விளைநிலப்பகுதிக்குவந்து செல்வதாக பழங்குடியின மக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட தம்மம்பதி, சரளப்பதி, சேத்துமடை, செமணாம்பதி, பழைய சர்க்கார்பதி, நாகரூத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள், வனம் மற்றும் வனத்தையொட்டி அமைந்துள்ளன.
இப்பகுதியில், ஏராளமான தென்னை, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
கோடை காலங்களில், வனப்பகுதியில் இருந்து, உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் யானைகள் வெளியே வருகின்றன.
இவை, வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து, சாகுபடி செய்யப்பட்ட தென்னை, வாழை, மா மரங்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இதைத்தடுக்க விளைநிலங்களுக்குள் நுழைவதை தடுக்க, சேத்துமடை, தம்மம்பதி, சரளப்பதி, செமணாம்பதி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, 30 கி.மீ., தொலைவுக்கு வனத்துறையினர் அகழி வெட்டினர்.
இதனால், விளைநிலங்களுக்குள் யானைகள் புகுவது குறைந்தது. அவை முறையாக பராமரிக்கப்படாமல் வீணாகியது;மண் சரிந்து அகழிகள் மறைந்து மேடாக மாறின. இந்நிலையில், பழங்குடியின மக்கள் குடியிருப்பு பகுதி அருகே, யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மீண்டும் அகழிகள் வெட்டப்படுகின்றன. அதில், பழைய சர்க்கார்பதி, நாகரூத், தம்பம்பதி பகுதியில், மூன்று கி.மீ., துாரத்துக்கு அகழிகள் வெட்டப்பட்டன.
யானைகள் வராமல் கட்டுப்படுத்தும் வகையில், ஆறு லட்சம் ரூபாய் செலவில், மூன்று கி.மீ., துாரத்துக்கு வெட்டப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலன் இல்லையே
விவசாயிகள், பழங்குடியின மக்கள் கூறியதாவது:
விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் இருக்க அகழிகள் வெட்டப்படுகின்றன. ஆனால், போதிய ஆழம் இல்லாமல் வெட்டப்பட்டுள்ளன.
பழைய சர்க்கார்பதி பகுதி அருகே வெட்டப்பட அகழி ஆழம் இல்லாததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வ சாதாரணமாக யானைகள் இறங்கி ஏறி, விளைநிலங்களுக்கு வந்து சென்றன.அகழி வெட்டியும் பயன் இல்லாத நிலையே உள்ளது.
பெயரளவுக்கு எடுக்கும் நடவடிக்கையால் அரசு நிதி தான் வீணாகும். எதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதோ அதன் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.
எனவே, அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, வனவிலங்குகள் வராமல் தடுக்கும் வகையில் அகழியை மேலும் அதிகளவு ஆழப்படுத்த வேண்டும். மேலும், மற்ற பகுதியில் உள்ள அகழிகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

