மாணவர்களை ஏமாற்ற பார்க்கிறதா திமுக அரசு: இபிஎஸ் கேள்வி
மாணவர்களை ஏமாற்ற பார்க்கிறதா திமுக அரசு: இபிஎஸ் கேள்வி
UPDATED : டிச 17, 2025 08:38 PM
ADDED : டிச 17, 2025 07:57 PM

சென்னை: பொம்மை லேப்டாப் கொடுத்து மாணவர்களை ஸ்டாலின் மாடல் அரசு ஏமாற்ற பார்க்கிறதா என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏழை எளிய மாணவர்களுக்கும் அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம், இலவச லேப்டாப் திட்டம். இந்த லேப்டாப்களால் பயனடைந்த இளைஞர்களை இன்றைய தினம் சந்தித்து, தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பெரும் மாற்றத்தினைக் கேட்டு அகமகிழ்ந்தேன்.
அதே சமயம், தற்போதைய அரசுப்பள்ளி மாணவர்களும், இன்றைய திமுக ஆட்சியில் லேப்டாப் கிடைக்காமல், விஞ்ஞானக் கல்வி கிடைப்பது தடைபட்டு, தாங்கள் வஞ்சிக்கப்படுவதை, தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
ஸ்டாலின் மாடல் அரசு, நான்கரை ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல், தற்போது தேர்தல் வரப்போகிறது எனத் தெரிந்ததும், ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகி விட்டார் இன்றைய முதல்வர்.
அரைகுறை ஆயிரம் ரூபாய் போலவே, இதுவும், சம்மந்தமே இல்லாமல், கல்வி ஆண்டின் நடுவில், கடைசி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதன் காரணம் என்ன? ஏன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை?
இன்றைய ஏஐ காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு தகவமைத்துக் கொள்ளும் அளவிற்கு இவர்கள் தரும் லேப்டாப் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. பொம்மை லேப்டாப் கொடுத்து மாணவர்களை ஏமாற்றப் பார்க்கிறதா ஸ்டாலின் மாடல் அரசு?
தேர்தல் கண்துடைப்புக்காக லேப்டாப் கொடுப்பது போல டிராமா நடத்தும் உங்களுக்கும், கல்வி மேம்பாட்டுக்காக தொடர்ந்து லேப்டாப் கொடுத்த எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது
#WhereIsOurLaptop என்று நான் கேட்கவில்லை; உங்களால் நான்கரை ஆண்டுகாலமாக வஞ்சிக்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் கேட்கிறார்கள். உரிய , முறையான பதில் வருமா ஸ்டாலின் அவர்களே?
இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.

