/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோஷம் முழங்க திறந்தது சொர்க்கவாசல். 'கோவிந்தா...கோவிந்தா' வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் பரவசம்
/
கோஷம் முழங்க திறந்தது சொர்க்கவாசல். 'கோவிந்தா...கோவிந்தா' வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் பரவசம்
கோஷம் முழங்க திறந்தது சொர்க்கவாசல். 'கோவிந்தா...கோவிந்தா' வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் பரவசம்
கோஷம் முழங்க திறந்தது சொர்க்கவாசல். 'கோவிந்தா...கோவிந்தா' வைகுண்ட ஏகாதசியில் பக்தர்கள் பரவசம்
ADDED : டிச 31, 2025 05:16 AM

கோவை சுற்றுவட்டார பெருமாள் கோயில்களில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
நேற்று அதிகாலை சூலூர் வட்டார பெருமாள் கோவில்களில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. சொர்க்கவாசல் திறப்பு உள்ளிட்டவை நடந்தன.
சூலூர் திருவேங்கட நாத பெருமாள் கோவிலில், மூலவர் மற்றும் உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல், கள்ளப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், கருமத்தம்பட்டி கரிய மாணிக்க பெருமாள் கோவில், கணியூர் கரி வரதராஜ பெருமாள் கோவில், காங்கயம் பாளையம், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, கலங்கல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெருமாள் கோவில்களில், நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் ஏராளமான பக்தர்கள் 'வேங்கடநாதா... கோவிந்தா' என கோஷங்கள் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். பஜனை பாடல்கள் பாடியும் மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.
அன்னுார் பெருமாள் கோயில்களில்... பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கும், 4:30 மணிக்கு வைகுண்ட நாராயண மூர்த்திக்கும் திருமஞ்சனம் நடந்தது. காலை 5:40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் வெங்கடேச பெருமாளை தரிசித்தனர். கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர். தேரோடும் வீதி வழியாக உற்சவர் உலா வந்து அருள் பாலித்தார்.
* கோவில்பாளையம் அருகே குரும்பபாளையம், வாத பெருமாள் கோவிலில் காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
* காட்டம்பட்டி ஊராட்சி, வரதையம் பாளையம் பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் மாலை பெருமாளுக்கு 21 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று காலை 4:00 மணிக்கு ஆழ்வார் பஜனை நடந்தது. காலை 4:30 மணிக்கு அலங்கார பூஜையும், 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும் நடந்தது.
* குன்னத்தூர் புதூர் நாராயணசாமி கோயிலில், 19வது ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவில் காலை 5:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சுவாமி திருவீதி உலா நடந்தது. ராமதாஸ் குழுவின் நாம சங்கீர்த்தனம் நடந்தது.
பெ.நா.பாளையத்தில்... பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் வட்டாரங்களில் உள்ள பெருமாள் கோயில்களில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோயில்களில் பெருமாள் தாயார்களுடன், சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில், அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. சொர்க்க வாசல் வழியாக நரசிங்க பெருமாளுடன் வந்த பக்தர்கள், 'கோவிந்தா...கோவிந்தா' என்ற கோஷத்துடன் பெருமாளை வழிபட்டனர்.
* நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
* அப்புலுபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில், காலை உற்சவர் சொர்க்கவாசல் வழியே புறப்பட்டு கோயிலை சுற்றி வந்தார். மாலை ஊஞ்சல் சேவை, மங்கள ஆரத்தி, சயன பூஜைகள் நடந்தன.
* சின்னதடாகம் கரிவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
* பாலமலை ரங்கநாதர் கோயில், காளிபாளையம் திருமலைராயப்பெருமாள் கோயில்களில், சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
- நமது நிருபர் குழு-:

