ADDED : டிச 19, 2025 05:58 AM

காந்திபுரம்: ராம்நகர் காளிங்க ராயன் வீதியில், மாநகராட்சி நிர்வாகம் 'பேட்ச் ஒர்க்' செய்திருக்கிறது. நகர் பகுதியில் 1,949 இடங்களில் இப்பணியை மேற்கொள்ள 2 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
கோவை ராம்நகர் பகுதியில் காளிங்கராயன் வீதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக, இரண்டு முறை ரோடு தோண்டப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவழித்து தார் ரோடு போடப்பட்டது. மழை பெய்தபோது ஆங்காங்கே ரோட்டில் பொத்தல் உருவானது. அதை சீரமைக்க 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டது. அதுவும் சில மாதங்களில் பெயர்ந்து வந்து விட்டதால், மீண்டும் சீரமைப்பு பணி செய்யப்பட்டது.
குடிநீர் குழாய் கசிவால் மீண்டும் பள்ளம் உருவானது. 12ம் தேதி தினமலர் படத்துடன் செய்தி வெளியிட்டது. அதையடுத்து மத்திய மண்டல உதவி நிர்வாக பொறியாளர் (பொ) குமரேசன் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்து, குடிநீர் கசிவை சரி செய்தனர்.
பின், பெரிதாக பள்ளம் உருவான இடத்தில், 'பேட்ச் ஒர்க்' செய்திருக்கின்றனர். இது, இவ்விடத்தில் மூன்றாவது முறையாக செய்யப்படும் பணி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலையை ஒழுங்காக செய்யாமல் மீண்டும் மீண்டும் மாநகராட்சி செய்வதால், தி.மு .க. அரசு மீது மக்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருகிறது. ரோடு பணிக்காக மட்டும் 615 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது.
குறுக்கு வீதிகளில் ரோடு போடுவதற்கு ரூ.200 கோடி கேட்டு மாநகராட்சி கருத்துரு அனுப்பியிருக்கிறது. இச்சூழலில், ஏற்கனவே போடப்பட்ட ரோடுகளில் எங்கெங்கு பள்ளம் ஏற்பட்டிருக்கிறது என கணக்கெடுக்கப்பட்டது. அதில், 1,949 இடங்களில் 25,093 சதுர மீட்டர் அளவுக்கு 'பேட்ச் ஒர்க்' செய்ய, 2 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியிருக்கிறது.

