/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொன்னது ஒன்று... செய்தது வேறொன்று; மின்வாரியம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
/
சொன்னது ஒன்று... செய்தது வேறொன்று; மின்வாரியம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
சொன்னது ஒன்று... செய்தது வேறொன்று; மின்வாரியம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
சொன்னது ஒன்று... செய்தது வேறொன்று; மின்வாரியம் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : செப் 19, 2025 10:27 PM
தொண்டாமுத்துார்; விவசாயிகளுக்கு இந்தாண்டு, 50,000 விவசாய இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், 16,025 இணைப்புகள் வழங்க மட்டுமே மின்வாரியம் அனுமதி அளித்திருப்பதாக, விவசாயிகள் வருத்தத்துடன் கூறியுள்ளனர்.
தமிழக அரசு சார்பில், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில், சாதாரண பிரிவில், மின்வழித்தட செலவு மற்றும் மின்சாரம் இலவசம். சுயநிதி பிரிவில், மின்வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும். மின்சாரம் மட்டும் இலவசமாக வழங்கப்படும்.
இலவச மின்சார இணைப்புக்காக, லட்சக்கணக்கான விவசாயிகள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இந்தாண்டு 50,000 விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என, தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தது. அவ்வாறின்றி, குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மின் இணைப்பு வழங்குவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடாசல மூர்த்தி கூறுகையில், ''தமிழகத்தில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். கடந்தாண்டு, 50,000 மின் இணைப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
ஆனால், 15,000 மின் இணைப்புக்கு மட்டுமே மின்வாரியம் அனுமதி அளித்திருக்கிறது. அதிலும், 13,700 மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்தாண்டும், 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 16,025 இணைப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில், 755 இணைப்புகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது, விவசாயிகளை ஏமாற்றும் வகையில் உள்ளது,'' என்றார்.