/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முடியலீங்க! உரிமைத்தொகை கள ஆய்வில் பணிகள் பாதிப்பதாக புலம்பல்
/
முடியலீங்க! உரிமைத்தொகை கள ஆய்வில் பணிகள் பாதிப்பதாக புலம்பல்
முடியலீங்க! உரிமைத்தொகை கள ஆய்வில் பணிகள் பாதிப்பதாக புலம்பல்
முடியலீங்க! உரிமைத்தொகை கள ஆய்வில் பணிகள் பாதிப்பதாக புலம்பல்
ADDED : செப் 20, 2025 06:07 AM

தொண்டாமுத்துார்; மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை ஆய்வு செய்ய, வீடு வீடாகச் செல்வதால், அன்றாட பணிகள் பாதிப்பதாக, வி.ஏ.ஓ.,க் கள் கூறுகின்றனர் .
தமிழக அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு, மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் துவங்கிய ஆரம்ப காலத்தில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால், ஏராளமான பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை.
பெண்களிடம் அதிருப்தி உருவானதால், நிபந்தனைகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. தற்போது கூடுதல் பயனாளிகளுக்கு வழங்க இருப்பதால், மீண்டும் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன.
அவை பதிவு செய்யப்பட்டு, கள ஆய்வுக்காக வி.ஏ.ஓ.,க்களுக்கு அனுப்பப்படுகிறது. அவர்கள், விண்ணப்பதாரரின் முகவரிக்கு நேரில் சென்று, உண்மைத் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அனைவர் வீட்டுக்கும் சென்று விசாரிக்க வேண்டியுள்ளது. வீடு வீடாகச் செல்வதால், அன்றாட பணிகள் பாதிப்பதாக வி. ஏ.ஓ.,க்கள் கூறுகின்றனர்.
வி.ஏ.ஓ.,க்கள் சிலர் கூறியதாவது:
உரிமைத் தொகை விண்ணப்பங்களை சரி பார்க்க, வீடு வீடாகச் செல்கிறோம். விண்ணப்பதாரர்கள் கொடுத்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டால், பலரும் எடுப்பதில்லை. சிலர், அந்த முகவரியில் இருப்பதில்லை.
இன்னும் சிலர், வேலைக்கு சென்று விடுவதால், அவர்கள் வீடு திரும்பும் வரை காத்திருந்து, இரவில் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், எங்கள் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.
வருவாய்த்துறை தொடர்பான பணிகளுக்காக வரும் பொதுமக்களும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை சரிபார்க்க, வி.ஏ.ஓ.,க்களுக்கு உதவியாக, மாநகராட்சி பணியாளர் ஒருவரை நியமிக்கின்றனர்.
அதுபோல், பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கும், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், பணியாளர்களை ஒதுக்கினால், வசதியாக இருக்கும். பொதுமக்களும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது' என்றனர்.