/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்கர நாற்காலியில் நோயாளி செல்வதற்கு ரூ.100 கொடு! அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது புகார்

ADDED : செப் 09, 2025 10:47 PM

கோவை; கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை உட்கார வைத்து அழைத்து செல்ல, 100 ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் தினமும் சராசரியாக 9,000 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஏழைகள். நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தாலும், பரிசோதனை, ஸ்கேன், ரத்த பரிசோதனை என பல்வேறு இடங்களுக்கு அலைய நேரிடுகிறது. நடக்க முடியாதவர்களுக்கு சக்கர நாற்காலி கிடைப்பது இல்லை.
காளிதாஸ் என்பவர் கூறுகையில், ''என் தந்தைக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது; சர்க்கரை நோயாளி. கால் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். எனக்கு 57 வயதாகிறது. தந்தையை 'மல்டி ஸ்பெஷாலிட்டி' கட்டடத்துக்கு பரிசோதனைக்கு அழைத்து வந்து, அலைக்கழிக்கப்பட்டோம்.
சக்கர நாற்காலி கேட்டு, இரண்டு மணி நேரம் காத்திருந்தும் யாரும் வரவில்லை. '100 ரூபாய் கொடுத்தால் வருகிறேன்' என ஒரு ஊழியர் சொன்னார்.
தருகிறேன் என்று சொன்ன பிறகும், 'ஏற்கனவே வெயிட்டிங்கில் உள்ளவர்களை முடித்து விட்டு வருவேன்; அதுவரை காத்திரு' என்கிறார். வெறுப்பாகி விட்டது. சிகிச்சையே வேண்டாம் என கிளம்பி விட்டேன்,'' என்றார்.
மருத்துவமனை டீன் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, ''ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக யாரும் இதுவரை புகார் சொல்லவில்லை. புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம். லஞ்சம் கேட்பதை ஏற்க முடியாது.
மருத்துவமனை சாலை மோசமாக இருப்பதால், வீல் சேர் சேதமாகிறது. சாலை அமைக்கும் பணி முடிந்துவிட்டால், வீல் சேர் செல்வது சுலபமாக இருக்கும். தேவைக்கு ஏற்ப அதிக வீல் சேர்களும் வாங்கப்படும்,'' என்றார்.