/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்
/
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்
ADDED : டிச 28, 2025 05:04 AM
கோவை,
கோவை மாவட்டத்தில், 1,011 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் குறைபாடுகள் இருந்த இரண்டு வாகனங்களுக்கு எப்.சி., ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படுகிறது. அந்த வகையில், கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக(ஆர்.டி.ஓ.,) எல்லைக்குள், 475, தெற்கு மற்றும் சூலுாரில், 558, மத்திய அலுவலகத்தில், 166, மேற்கு அலுவலகத்தில், 445 என, 1644 வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
அவிநாசி ரோடு, பி.ஆர்.எஸ்., மைதானத்தில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் பள்ளி வாகனங்களை நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவசர கால கதவு, ஜன்னல், படிகள், சி.சி.டி.வி., கேமரா குறித்து டிரைவர்களிடம் கேட்டறிந்ததுடன், அவற்றை இயக்கியும் சோதித்தார்.
'எப்போது முழு உடல் பரிசோதனை செய்தீர்கள். குறிப்பாக கண் பரிசோதனை அடிக்கடி செய்து கொள்கிறீர்களா?' என்று டிரைவர்களிடம் கேட்ட கலெக்டர்,'குழந்தைகள் பாதுகாப்பும் உங்களது பாதுகாப்பும் ரொம்ப முக்கியம். ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் முகாம்கள் நடக்கின்றன. அங்கு மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்' என அறிவுறுத்தினார்.
நிறைவில், பவன்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,''பள்ளி வாகனங்கள் அதிவேகமாக செல்வது குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பஸ்களிலும் ஆர்.டி.ஓ.க்கள் ஆய்வு செய்கின்றனர். மாநகராட்சி வாகனங்கள் மோசமான நிலையில் இருப்பதாக புகார் வந்தாலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
மத்திய ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் கூறுகையில்,''1644 வாகனங்களில், 1011 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள, 633 வாகனங்களை ஜன. 15ம் தேதிக்குள் ஆய்வு செய்வோம்'' என்றார்.

