/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழிகாட்டி பலகையை மறைத்து விளம்பரம் வாகன ஓட்டுநர்கள் திணறல்
/
வழிகாட்டி பலகையை மறைத்து விளம்பரம் வாகன ஓட்டுநர்கள் திணறல்
வழிகாட்டி பலகையை மறைத்து விளம்பரம் வாகன ஓட்டுநர்கள் திணறல்
வழிகாட்டி பலகையை மறைத்து விளம்பரம் வாகன ஓட்டுநர்கள் திணறல்
ADDED : மே 31, 2024 11:22 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், நெடுஞ்சாலைத்துறை வழிகாட்டி அறிவிப்புப் பலகையை மறைத்து, தனியார் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.
பொள்ளாச்சி நகரில் இருந்து, கோவை, திருப்பூர், தாராபுரம், உடுமலை, வால்பாறை, திருச்சூர், பாலக்காடு நோக்கி முக்கிய வழித்தடங்கள் உள்ளன. இதனால், 'எந்த ஊருக்கு, எந்த பாதையில், எவ்வளவு தொலைவு பயணிக்க வேண்டும்' என்ற தகவலை அறிந்துக் கொள்ள, நெடுஞ்சாலைத்துறையால், ஆங்காங்கே தகவல் வழிகாட்டி பலகைகள் வைக்கப்படுகின்றன.
மாநில, தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, கிராமப்புற ரோட்டோரங்களிலும், இத்தகைய வழிகாட்டி பலகைகள் உள்ளன.ஆனால், பொள்ளாச்சி நகரின் பல இடங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள், தனியாரின் விளம்பரங்களை தாங்கி நிற்கும் நிலையில் உள்ளன. வாகன ஓட்டுநர்களுக்காக அதில் உள்ள தகவல்கள் மறைக்கப்படுகின்றன.
குறிப்பாக, இத்தகைய அறிவிப்பு பலகையை மறைத்தவாறு, தனியாரின் விளம்பர பேனர்கள் காணப்படுகின்றன. இதனால், புதிதாக, நகரைக் கடந்து செல்லும் வாகன ஓட்டுநர்கள் சரியான வழித்தடம் அறிந்து கொள்ள முடியாமல் குழப்பமடைகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், அவ்வப்போது ஆய்வு செய்து, இத்தகைய குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
சில இடங்களில், போலீசார் வைத்துள்ள போக்குவரத்து விதிமுறை குறித்து அறிவிப்புகளும், வழிகாட்டி பலகையை மறைத்துள்ளன. போலீசாருக்கு 'ஸ்பான்சர்' வழங்கிய தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் சார்பில், விளம்பரம் வைக்கப்படுகிறது. போலீசார் 'ஸ்பான்சர்' பிடிப்பதை தவிர்த்தால், இது போன்ற பிரச்னைகள் ஏற்படாது.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'வழிகாட்டி பலகைகளில், ஊர்களுக்கான வழித்தடம் மற்றும் தொலைவு குறிப்பிடுவதுபோல, அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் போன்றவற்றின் தொடர்பு எண்களையும் குறிப்பிட வேண்டும்,' என்றனர்.

