/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமான நிலைய புது மேம்பால திட்ட அறிக்கை நிராகரிப்பு தமிழக அரசின் செயலால் ஆணையம் அதிர்ச்சி
/
விமான நிலைய புது மேம்பால திட்ட அறிக்கை நிராகரிப்பு தமிழக அரசின் செயலால் ஆணையம் அதிர்ச்சி
விமான நிலைய புது மேம்பால திட்ட அறிக்கை நிராகரிப்பு தமிழக அரசின் செயலால் ஆணையம் அதிர்ச்சி
விமான நிலைய புது மேம்பால திட்ட அறிக்கை நிராகரிப்பு தமிழக அரசின் செயலால் ஆணையம் அதிர்ச்சி
UPDATED : செப் 20, 2025 12:15 AM
ADDED : செப் 20, 2025 12:01 AM

தாம்பரம் - போரூர் சாலையில் இருந்து நேரடியாக, சென்னை விமான நிலையத்திற்கு வாகனங்கள் வந்து செல்லும் வகையில், புதிய மேம்பால சாலை அமைக்கும் திட்டத்திற்கு, தமிழக அரசு அனுமதி தராமல் கைவிரித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலைய ஆணைய அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் மூன்று முனையங்களுடன் செயல்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இங்கு, உள்நாடு, வெளிநாடு செல்வதற்கென, 60,000த்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். பயணியர் போக்குவரத்து மட்டுமின்றி சரக்கு போக்குவரத்திலும், சென்னை விமான நிலையம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள், தற்போது ஜி.எஸ்.டி., சாலை வழியாக மட்டுமே வர முடியும் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் எதற்காக இங்கு வந்தோம் என, பயணியர் புலம்பும் நிலை தொடர்கிறது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, தாம்பரம் - போரூர் சாலை வழியாக, விமான நிலையத்தின் மறுபுறத்தில் இருந்து, புதிதாக மேம்பால சாலை அமைக்க திட்டமிட்டது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அனுமதி கிடைத்தால் பெரிய தலைவலி குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், புதிய மேம்பால சாலை திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி தர மறுத்துவிட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சென்னை விமான நிலைய வளர்ச்சிக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில், தமிழக அரசு முட்டுக் கட்டை போட்டு வருவதாக, மத்திய அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
தற்போது, விமான நிலைய புதிய மேம்பால சாலை திட்டதுக்கு அனுமதி தராமல், தமிழக அரசு கைவிரித்துள்ளது, விமான நிலைய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் செயல் என, விமான நிலைய ஆணைய அதிகாரிகள், விமான போக்கு வரத்து வல்லுநர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், தாம்பரம் - போரூர் சாலை வழியாக, சென்னை விமான நிலையத்திற்கு மேம்பால சாலை அமைக்க ஆணையம் திட்டமிட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை, 2024 மார்ச்சில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது; அனுமதி கிடைக்கவில்லை.
எனவே, டில்லியில் உயர் அதிகாரிகள் தலைமையில் மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் மாதம், புதிய விரிவான திட்ட அறிக்கை, இரண்டாவது முறையாக மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அறிக்கையில், 'மாநில அரசு அனுமதித்தால் போதும்; ஆணையமே மேம்பால சாலையை அமைத்துக் கொள்ளும்' என, தெளிவுப்படுத்தி இருந்தோம்.
எப்படியும் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்தோம். அரசின் அனுமதி கிடைக்க வில்லை. திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை என, தமிழக அரசு கைவிரித்துவிட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பரந்துார் திட்டத்தால் புறக்கணிப்பு? விமான போக்குவரத்து வளர்ச்சி பணிகளை, குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். ஆனால், சென்னையில் அப்படி எதுவுமே நடப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் போராடும் நிலை உள்ளது. பரந்துார் விமான நிலையம் வரப்போவதால், எதற்கு கஷ்டப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கான மேம்பாட்டு பணி செய்ய வேண்டும் என, மாநில அரசு நினைக்கிறதா என தெரியவில்லை. இதற்கு மேலும் தமிழக அரசு மவுனமாக இருந்தால், நஷ்டம் நமக்குத்தான். - விமான போக்குவரத்து வல்லுநர்கள்
- நமது நிருபர் -