/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி கண்டுகொள்ளாததால் சீரமைப்பில் களமிறங்கிய மக்கள்
/
மாநகராட்சி கண்டுகொள்ளாததால் சீரமைப்பில் களமிறங்கிய மக்கள்
மாநகராட்சி கண்டுகொள்ளாததால் சீரமைப்பில் களமிறங்கிய மக்கள்
மாநகராட்சி கண்டுகொள்ளாததால் சீரமைப்பில் களமிறங்கிய மக்கள்
ADDED : செப் 10, 2025 12:23 AM

புழல், மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் பலன் இல்லாததால், குடியிருப்பு மக்களே நகரில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
புழல் கதிர்வேடு அருகே உள்ள பிரிட்டானியா நகர், 2010ல் உருவானது. இங்கு, 14 தெருக்கள் உள்ளன. மாநகராட்சியில், 31, 32 வது வார்டுகளில் இப்பகுதிகள் வருகின்றன.
இந்த பகுதிகளில் பல வீடுகளுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பு வசதிகள் இன்னும் தரப்படவில்லை. நகரில் உள்ள சாலையின் இருபுறமும் முட்செடிகள் ஆளுயரத்திற்கு வளர்ந்து, பாதசாரிகளையும், பைக்கில் செல்வோரையும் பதம் பார்த்தன.
குடியிருப்போர் நல சங்கத்தினர், மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
யாரும் சீரமைக்க முன்வராததால், பிரிட்டானியா நகர் குடியிருப்பு நலச்சங்கத்தினரே, தங்கள் பணத்தில் பொக்லைன் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து, இரண்டு நாட்களாக சாலையோரம் வளர்ந்த முட்செடிகளை அகற்றி உள்ளனர்.
இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் அரசு சார்பில், பல்வேறு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், எங்கள் பகுதிக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் வசதி வேண்டி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகிறோம்.
மாதவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுதர்சனம், குடிநீர்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் பணிகள் நடக்கவில்லை.
தற்போது சாலையில் நடந்து செல்ல முடியாதவாறு, முட்செடிகள் வளர்ந்துள்ளது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடமும், மாநகராட்சியின் சேவை எண்ணிலும் புகார் அளித்தோம்; பயனில்லை.
இதனால் நாங்களே, 20,000 ரூபாய் செலவழித்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து முட்செடிகளை அகற்றினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.