/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குவியும் மின் பழுது புகார்கள் வடசென்னை தான் 'டாப்'
/
குவியும் மின் பழுது புகார்கள் வடசென்னை தான் 'டாப்'
குவியும் மின் பழுது புகார்கள் வடசென்னை தான் 'டாப்'
குவியும் மின் பழுது புகார்கள் வடசென்னை தான் 'டாப்'
ADDED : செப் 12, 2025 02:46 AM
சென்னை, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே, மின் சாதனங்களில் ஏற்படும் பழுதால், தமிழகம் முழுதும் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு வருகிறது.
இதனால், மின்வாரியத்தின், 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்திற்கு, சராசரியாக தினமும், 2,500 புகார்கள் வந்த நிலையில் தற்போது, 3,500 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிக அளவாக, தினமும் 1,000 புகார்கள் வருகின்றன.
தமிழகம் முழுதும் வசிக்கும் மக்கள் மின் தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின் கட்டணம் வசூல் என, மின்சாரம் தொடர்பான புகார்களை, மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில், 94987 94987 மொபைல் போன் எண்ணில், 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.
இந்த மின்னகம், சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு பெறப்படும் புகார், கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக உதவி பொறியாளருக்கு தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து விபரங்களும் கணினியில் பதிவு ஆவதால், குறித்த காலத்திற்குள் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மின்னகத்திற்கு தினமும், 2,000 - 2,500 புகார்கள் வந்தன.
வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், தற்போதே பல இடங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு, மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேர மின்தடையால், மக்கள் துாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
சமீபகாலமாக, மின்னகத்திற்கு தினமும் வரும் புகார்களின் எண்ணிக்கை, 3,000 - 3,500 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்தான் அதிக அளவாக, 1,000 புகார்கள் வருகின்றன.
அதிலும், மணலி, புழல், பாடி, கொடுங்கையூர், பெரம்பூர், செங் குன்றம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வட சென்னையில் தான், 60 சதவீத புகார்கள் பதிவாகின்றன.
இதுகுறித்து, மின் வாரிய பணியாளர்கள் கூறியதாவது:
வடசென்னையின் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. மின் வாரியம் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை, மந்தகதியில் நடக்கின்றன.
பயன்பாட்டில்உள்ள டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் பொருத்தப்பட்டு, பல ஆண்டுகள் ஆவதால், அவற்றில் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதுவே, மின் தடைக்கு முக்கிய காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.