/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிளாம்பாக்கம் - மஹிந்திரா சிட்டி மேம்பால சாலை திட்டம் இழுத்தடிப்பு! ரூ.3,100 கோடி திட்டத்திற்கு அனுமதி தராத தமிழக அரசு
/
கிளாம்பாக்கம் - மஹிந்திரா சிட்டி மேம்பால சாலை திட்டம் இழுத்தடிப்பு! ரூ.3,100 கோடி திட்டத்திற்கு அனுமதி தராத தமிழக அரசு
கிளாம்பாக்கம் - மஹிந்திரா சிட்டி மேம்பால சாலை திட்டம் இழுத்தடிப்பு! ரூ.3,100 கோடி திட்டத்திற்கு அனுமதி தராத தமிழக அரசு
கிளாம்பாக்கம் - மஹிந்திரா சிட்டி மேம்பால சாலை திட்டம் இழுத்தடிப்பு! ரூ.3,100 கோடி திட்டத்திற்கு அனுமதி தராத தமிழக அரசு
ADDED : டிச 15, 2025 04:52 AM

சென்னை: கிளாம்பாக்கம் - மஹிந்திரா சிட்டி இடையே, 3,100 கோடி ரூபாயிலான உயர்மட்ட மேம்பாலச்சாலை திட்டத்திற்கு, தமிழக அரசு அனுமதி தராமல் ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறது. மத்திய அரசு வழங்கியுள்ள நிதியில், அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் பணிகளை துவங்காவிட்டால் திட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்படலாம் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக, இரும்புலியூர் - திண்டிவனம் இடையிலான, 97 கி.மீ., சாலை உள்ளது. இந்த சாலையில் சரக்கு வாகனங்கள், பயணியரின் வாகன போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில், இச்சாலையில் பயணிப்பது மிகுந்த சிரமமாக உள்ளது.
சென்னையில் இருந்து பரனுார் சுங்கச்சாவடியை கடப்பதற்கு, மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால், பண்டிகை மற்றும் விடுமுறை நாள் முடிந்தபின், ஊருக்கு தாமதமாக செல்லும் நிலை பலருக்கு ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பரனுார் - திண்டிவனம் சாலையை, 10 வழியாக விரிவாக்கம் செய்வதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்வந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இரும்புலியூர் முதல் மஹிந்திரா சிட்டி வரை, 19 கி.மீ.,க்கு உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
திட்டப் பணிக்கு 3,100 கோடி ரூபாயை வழங்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், அனுமதி வழங்கியுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், தமிழக அரசு இன்னும் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
மத்திய அரசு வழங்கியுள்ள நிதியில், அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் பணிகளை துவங்க வேண்டும். இல்லாவிட்டால் திட்டத்தை கைவிட வேண்டிய நிலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ஏற்படும். இதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வடிவமைப்பு தயார் இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரும்புலியூர் - திண்டிவனம் இடையிலான சாலை விரிவாக்க பணிக்கு, வீராணம் குடிநீர் குழாயை மாற்றி அமைக்க வேண்டும்.
கிளாம்பாக்கம் - மஹிந்திரா சிட்டி இடையிலான உயர்மட்ட மேம்பால சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்கான கட்டுமான வடிவமைப்பு தயார் செய்யப்பட்டு உள்ளது.
கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளதால், உயர்மட்ட மேம்பாலச்சாலை திட்டத்திற்கு மாநில அரசும், மெட்ரோ ரயில்வே நிர்வாகமும் இன்னும் அனுமதி வழங்கவில்லை.
அனுமதி வழங்கிய பின், மெட்ரோ ரயில் வழித்தடத்தை பாதிக்காமல், உயர்மட்ட மேம்பாலத்திற்கான வடிவமைப்பை மாற்ற வேண்டியுள்ளது. திட்ட மதிப்பீடு தொகையும் அதிகரிக்கும்.
மாநில அரசின் அனுமதிக்கு ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கிறோம். தலைமை செயலர் நடத்திய இரண்டு கூட்டத்தில், இதுதொடர்பாக வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி தாமதம் இதுகுறித்து, தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதா அல்லது செமி ஸ்பீட் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதா என அரசு பரிசீலித்து வருகிறது.
சென்னையில் இருந்து விழுப்புரம், ஜோலார்பேட்டை, கோவை - திருப்பூர் - சேலம் ஆகிய வழித்தடங்களில், செமி ஸ்பீட் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மெட்ரோ ரயில் நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டி உள்ளது. விரைவில் தலைமை செயலர் தலைமையில், இதற்கான கூட்டம் நடக்கவுள்ளது.
இதை கவனத்தில் கொள்ளாமல், உயர்மட்ட மேம்பாலச்சாலைக்கு அனுமதி வழங்கிவிட்டால், பின்னர் வழித்தடங்களை மாற்ற முடியாமல் போகலாம். இதற்காகவே, திட்டத்திற்கு அனுமதி வழங்க தாமதமாகி வருகிறது.
அதேநேரம், இரும்புலியூர் - திண்டிவனம் விரிவாக்க திட்டம் அவசியமானது என்பதில், தமிழக அரசிற்கு மாற்று கருத்து இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

