/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரைம் கார்னர்: 8 கிலோ கஞ்சா பறிமுதல்
/
கிரைம் கார்னர்: 8 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : டிச 15, 2025 04:52 AM
பூந்தமல்லி: பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த ஒடிசா வாலிபரை மடக்கி, பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், 8 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், மகாதீபா நாக், 29, என்பதும் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
போதை மாத்திரை விற்றவர் கைது
விருகம்பாக்கம்: விருகம்பாக்கம் அம்பேத்கர் நகர், செல்லியம்மன் கோவில் தெருவில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக, பேலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட விருகம்பாக்கம் போலீசார், போதை மாத்திரை வைத்திருந்த, காட்டுப்பாக்கம் விநாயகபுரத்தைச் சேர்ந்த சதீஷ், 26 என்பவரை கைது செய்தனர். 41 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
லாட்டரி சீட்டு விற்ற 6 பேருக்கு 'காப்பு'
கே.கே.நகர்: கே.கே.நகர், காமராஜர் சாலை பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சேப்பாக்கத்தைச் சேர்ந்த பழனிசாமி, 44, கே.கே.நகரைச் சேர்ந்த ஜெயசந்திரன், 49, வியாசர்பாடியைச் சேர்ந்த பிரேம்குமார், 39, உட்பட ஆறு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 75,000 ரூபாய் மற்றும் 11 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேடப்படும் குற்றவாளி அகப்பட்டார்
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, காட்டூர், நல்லமுத்து ஆச்சாரி தெருவில், புளியந்தோப்பு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், புளியந்தோப்பு, வ.உ.சி., நகரைச் சேர்ந்த சஞ்சய், 19, என்பதும், புரசைவாக்கத்தில் கட்டடப்பணி நடக்கும் இடத்தில் மொபைல்போன் திருடிய வழக்கில், தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதும் தெரிந்தது. இதையடுத்து புளியந்தோப்பு போலீசார், நேற்று அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கிளப்பில் சூதாடிய 5 பேர் கைது
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இயங்கும் தனியார் கிளப்பில் சூதாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, கிளப்புக்குள் நுழைந்து போலீசார் சோதித்த போது, பணம் வைத்து சூதாடியது உறுதியானது.
இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட கோடம்பாக்கத் தைச் சேர்ந்த அறிவழகன், 28, ஆலந்துார் கவுரிசங்கர், 53, ஆவடி ரவி, 63, செங்குன்றம் சம்பத்குமார், 45, திரு.வி.க., நகரைச் சேர்ந்த பன்னீர் செல்வன், 56, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

