/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்முறையாக சிப்பிக்கொத்தி பறவை அடையாறு முகத்துவார பகுதியில் முகாம்
/
முதல்முறையாக சிப்பிக்கொத்தி பறவை அடையாறு முகத்துவார பகுதியில் முகாம்
முதல்முறையாக சிப்பிக்கொத்தி பறவை அடையாறு முகத்துவார பகுதியில் முகாம்
முதல்முறையாக சிப்பிக்கொத்தி பறவை அடையாறு முகத்துவார பகுதியில் முகாம்
ADDED : செப் 19, 2025 12:20 AM

சென்னை சென்னை அடையாறு முகத்துவார பகுதியில் முதல் முறையாக, அரியவகை சிப்பிக்கொத்தி பறவை வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பறவைகள் வருவது வழக்கம். இவ்வாறு வரும் வெளிநாட்டு பறவைகள், சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் முகாமிடுகின்றன.
இந்நிலையில், சென்னை அடையாறு முகத்துவாரப் பகுதியில் அரியவகை கடற்பறவைகள் வந்துள்ளதாக, 'இ பேர்டு' என்ற இணையதளத்தில் தகவல் பரவியது.
இதையடுத்து, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பறவை ஆர்வலர்கள், அடையாறு முகத்துவார பகுதிகளில் சில நாட்களாக வந்து செல்கின்றன. இந்நிலையில் அங்கு, அரியவகை கடற்பறவையான சிப்பிக்கொத்தி இருப்பது உறுதியானது.
இது குறித்து 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:
அரிய வகை சிப்பிக்கொத்தி பறவைகளை, தமிழகம் உள்ளிட்ட பகுதி களில் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில் 'இ பேர்டு' தகவல் அடிப்படையில் இங்கு வந்து பார்த்த போது, இரண்டு சிப்பிக்கொத்தி இருப்பது உறுதியானது.
ஆப்ரிகா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இப்பறவைகள் வருகின்றன. தமிழகத்தில் பழவேற்காடு பகுதிக்கு, சீசன் காலத்தில் ஓரிரு சிப்பி கொத்தி வந்துள்ளது.
முட்டுக்காடு முகத்துவார பகுதியில் இவற்றின் நடமாட்டம் குறித்து, கடந்த ஆண்டு தகவல் வெளியானது.
ஆனால் தற்போது, சென்னையில் மக்கள் நெரிசல் அதிகம் உள்ள அடையாறு முகத்துவார பகுதியில் இவை வந்திருப்பது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இங்கு, சிப்பிகள் அதிகம் கரை ஒதுங்குவதால் போதிய உணவு கிடைக்கும் என்ற காரணத்தால் சிப்பிக்கொத்தி பறவைகள் முகாமிட்டுள்ளன.
இது மட்டுமல்லாது, 150 உப்புக்கொத்தி, 30 பொன்னிற உப்புக்கொத்தி, 20 பட்டைவால் மூக்கன், ஐந்து கல்திருப்பி உள்ளான் போன்ற வலசை பறவைகளும் முகாமிட்டுள்ளன. இது பறவைகள் ஆர்வலர்களை ஈர்த்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.