/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொடி கம்பங்களை வரும் 15க்குள் அகற்ற ' கெடு '
/
கொடி கம்பங்களை வரும் 15க்குள் அகற்ற ' கெடு '
ADDED : செப் 11, 2025 04:28 AM
சென்னை, 'நீதிமன்ற உத்தரவுபடி, சென்னையில் உள்ள, 3,154 கொடி கம்பங்களை வரும் 15ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களை ஆக்கிரமித்து, அரசியல் கட்சிகள் இஷ்டம்போல் கொடிக் கம்பங்கள் நட்டுள்ளன. இவற்றால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் திணறுகின்றனர்.
பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி இடங்களில், நிரந்தரமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க, எந்த சட்டத்திலும் அனுமதியில்லை. இது தொடர்பாக, தடையில்லா சான்றிதழ் வழங்க போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் அதிகாரம் இல்லை.
எனவே, பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, அனைத்து கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.
இதையடுத்து, கொடி கம்பங்களை அகற்ற, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமர குருபரன் கூறியதாவது:
அரசியல் கட்சி மற்றும் சமுதாய கொடி கம்பங்கள் அகற்றுவது தொடர்பாக, இன்று முதல் சம்பந்தப் பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
வரும், 15ம் தேதிக்குள் கொடி கம்பங்களை தாங்களாகவே அகற்ற வேண்டும். தவறினால், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றப்படும்.
அதற்கான செலவு தொகையை நீதிமன்ற உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட கட்சிகள், அமைப்புகளிடம் வசூலிக்கப்படும்.
சென்னையில் உள்ள, 3,450 கொடி கம்பங்களில், 296 கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,154 கம்பங்கள் சில நாட்களில் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.