/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமற்ற சாலை அமைத்த நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் அடையாறு மண்டல தலைவர் 'காட்டம்'
/
தரமற்ற சாலை அமைத்த நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் அடையாறு மண்டல தலைவர் 'காட்டம்'
தரமற்ற சாலை அமைத்த நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் அடையாறு மண்டல தலைவர் 'காட்டம்'
தரமற்ற சாலை அமைத்த நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் அடையாறு மண்டல தலைவர் 'காட்டம்'
ADDED : டிச 15, 2025 04:24 AM
அடையாறு: 'தரமில்லாமல் சாலை அமைத்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க வேண்டும்' என, அடையாறு மண்டல குழு தலைவர் தெரிவித்தார்.
அடையாறு மண்டல குழு கூட்டம், மண்டல அதிகாரி செந்தில்குமரன் முன்னிலையில், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலர் ஜான்சி பங்கேற்றார். கூட்டத்தில் சாலை, வடிகால்வாய் உள்ளிட்ட பணிகள் உட்பட, 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வார்டு பிரச்னைகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து கவுன்சிலர்கள் பேசியதாவது:
மோகன் குமார், தி.மு.க., 168வது வார்டு: சிட்கோ நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கிண்டியில் மழையின்போது பாதிப்பு பகுதிகளை எட்டி பார்க்கவில்லை. நிர்வாக குளறுபடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
கதிர் முருகன், அ.தி.மு.க., 170வது வார்டு: கோட்டூர்புரம் வாரிய குடியிருப்புகள் சீரமைக்கப்படாததால், வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. வேகத்தடை கேட்டு பல மாதமாகியும் நடவடிக்கை இல்லை.
கீதா, தி.மு.க., 171வது வார்டு: பூங்கா ஊழியர்களுக்கு பத்மாவதி ஒப்பந்த நிறுவனம், மாதக்கணக்கில் ஊதியம் வழங்காததால், பூங்காக்கள் முறையாக திறக்கப்படுவதில்லை.
சுபாஷினி, காங்., 173வது வார்டு: பூங்காக்களில் மின்விளக்குகள் எரியாததால், இரவு வேளைகளில் மக்கள் பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.
ராதிகா, தி.மு.க., 174வது வார்டு: பெசன்ட் நகரில், பல நடைபாதைகள் பயன்படுத்த முடியாத வகையில் உள்ளன.
மகேஸ்வரி, தி.மு.க., 175வது வார்டு: அம்பேத்கர் நகரில் நிறுத்தப்பட்ட சாலை, மழைநீர் வடிகால்வாய் பணிகளை துவங்க வேண்டும்.
மணிமாறன், தி.மு.க., 177வது வார்டு: வேளச்சேரி திருமண மண்டபம் கட்ட நிதி ஒதுக்கி பல மாதமாகிறது. பணி துவங்க காலதாமதத்திற்கு காரணமான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.
பாஸ்கரன், தி.மு.க., 178வது வார்டு: தரமணியில் நிலத்தடி நீரின் தரம் மாறிவிட்டதால், அதற்கான காரணத்தை கண்டறிந்து தடுக்க வேண்டும்.
கயல்விழி, தி.மு.க., 179வது வார்டு: திருவான்மியூரில் கழிவு நீரேற்று நிலையம் கட்டும் பணியை, தொகுதி எம்.எல்.ஏ., நிறுத்தியதால், மாற்று இடத்தில் விரைந்து பணி துவங்க வேண்டும்.
விசாலாட்சி, தி.மு.க., 180வது வார்டு: திருவான்மியூர் கடற்கரையில் பேவர் பிளாக் சாலை அமைக்க, பல மாதங்களாக கோரிக்கை வைத்தும் நடக்கவில்லை.
இதையடுத்து, மண்டல குழு தலைவர் துரைராஜ் பேசியதாவது:
பல இடங்களில் புது சாலைகள் பழுதடைந்ததாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சாலைகள் தரமில்லாமல் போடப்பட்டிருந்தால், ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கும் நிதியை முடக்கி வைக்க வேண்டும். கோப்புகளை கிடப்பில் போடாமல், திட்ட பணிகளை விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

