/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
574 ரன் குவித்து பீஹார் சாதனை * விஜய் ஹசாரே டிராபி தொடரில்...
/
574 ரன் குவித்து பீஹார் சாதனை * விஜய் ஹசாரே டிராபி தொடரில்...
574 ரன் குவித்து பீஹார் சாதனை * விஜய் ஹசாரே டிராபி தொடரில்...
574 ரன் குவித்து பீஹார் சாதனை * விஜய் ஹசாரே டிராபி தொடரில்...
ADDED : டிச 24, 2025 11:00 PM

ராஞ்சி: 'லிஸ்ட் ஏ' ஆண்கள் கிரிக்கெட்டில் 50 ஓவரில் 574/6 ரன் குவித்து, பீஹார் அணி உலக சாதனை படைத்தது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடர் நேற்று துவங்கியது. மொத்தம் 38 அணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள், லீக் முறையில் நடக்கின்றன.
ராஞ்சியில் நடந்த 'பிளேட் குரூப்' போட்டியில் பீஹார், அருணாச்சல பிரதேச அணிகள் மோதின.
வைபவ் ரன்குவிப்பு
'டாஸ்' வென்று களமிறங்கிய பீஹார் அணிக்கு மங்கல் மக்ருவர், வைபவ் சூர்யவன்ஷி ஜோடி மின்னல் வேக துவக்கம் தந்தது. 14.3 ஓவரில் 158 ரன் சேர்த்த போது மங்கல் (33) அவுட்டானார். 36 பந்தில் வைபவ் சதம் கடந்தார். இவர், 84 பந்தில் 190 ரன் (15X6, 16X4) எடுத்து அவுட்டானார். ஆயுஷ் 56 பந்தில் 116 ரன் எடுத்தார்.
சகிபுல் அபாரம்
கேப்டன் சகிபுல் கனி 32 பந்தில் சதம் அடித்து சாதித்தார். விஜய் ஹசாரே தொடரில் ஒரே போட்டியில் 3 சதம் அடித்த முதல் அணியானது பீஹார். முடிவில், 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 574 ரன் குவித்து, உலக சாதனை படைத்தது. சகிபுல் (40 பந்து, 128 ரன்) அவுட்டாகாமல் இருந்தார்.
பின் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி, 42.1 ஓவரில் 177 ரன்னில் சுருண்டது. கேப்டன் கம்ஷா அதிகபட்சம் 32 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். பீஹார் அணி 397 ரன்னில் வெற்றி பெற்றது.
632 ரன்
ஆண்கள் 'லிஸ்ட் ஏ' அரங்கில் (சர்வதேச, உள்ளூர் ஒருநாள் போட்டி) ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த அணியானது பீஹார் (574/6). இதற்கு முன் 2022-23ல் தமிழக அணி 506/2 ரன் (அருணாச்சல பிரதேசம்) எடுத்து இருந்தது.
* ஒட்டுமொத்த 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் இலங்கையின் கன்டுயான் பெண்கள் அணி 632/4 ரன் (2007, எதிர்-புஷ்பதனா) எடுத்தது முதலிடத்தில் உள்ளது.
அடுத்தடுத்து மாறிய அதிவேக சதம்
இந்திய 'லிஸ்ட் ஏ' அரங்கில் நேற்று, அதிவேக சதம் அடித்த 2வது வீரர் ஆனார் வைபவ் (36 பந்து). முதலிடத்தில் பஞ்சாப்பின் அன்மோல்பிரீத் சிங் (35 பந்து, 2024, எதிர்-அருணாச்சல பிரதேசம்) இருந்தார்.
* அடுத்த சில நிமிடத்தில் பீஹாரின் சகிபுல் கனி (32 பந்து) முதலிடம் பிடித்தார்.
* மற்றொரு போட்டியில் அசத்திய ஜார்க்கண்ட்டின் இஷான் கிஷான் (33), அன்மோல்பிரீத்தை பின்தள்ளி, 2வது இடம் பெற்றார். ஒரே நாளில் அடுத்தடுத்து பட்டியல் மாறியது.
* தற்போது 'லிஸ்ட் ஏ' அரங்கில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர்களில் சகிபுல் கனி (32), இஷான் கிஷான் (33), அன்மோல்பிரீத் சிங் (35) 'டாப்-3' ஆக உள்ளனர்.
* ஒட்டுமொத்த 'லிஸ்ட் ஏ' அரங்கில் தெற்கு ஆஸ்திரேலிய வீரர் ஜாக் பிரேசர் மெக்கர்க் (29 பந்து, எதிர்-டாஸ்மானியா, 2023-24), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (31, எதிர்-வெ.இண்டீஸ்), சகிபுல் கனி (32), 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.
இளம் வீரர்
'லிஸ்ட் ஏ' அரங்கில் சதம் அடித்த இளம் வீரர் ஆனார் வைபவ் (14 ஆண்டு, 272 நாள்).
டிவிலியர்சை முந்திய வைபவ்
'லிஸ்ட் ஏ' அரங்கில் அதிவேகமாக 150 ரன் எடுத்த வீரர் வரிசையில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்சை (64 பந்து, 2015) முந்தி, முதலிடம் பிடித்தார் வைபவ் (59 பந்து). இங்கிலாந்தின் பட்லர் (65, 2022) 3வதாக உள்ளார்.

