/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகரப் பகுதியில் பொது கழிப்பிடங்கள் பற்றாக்குறை அவலம்; புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி
/
நகரப் பகுதியில் பொது கழிப்பிடங்கள் பற்றாக்குறை அவலம்; புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி
நகரப் பகுதியில் பொது கழிப்பிடங்கள் பற்றாக்குறை அவலம்; புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி
நகரப் பகுதியில் பொது கழிப்பிடங்கள் பற்றாக்குறை அவலம்; புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதி
ADDED : ஏப் 24, 2024 08:49 AM

புதுச்சேரி, : அதிகரித்து வருகின்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல், நகரப் பகுதியில் கழிப்பிடங்கள் இல்லாததால், பொது இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் தேடப்படும் சுற்றுலா மை யமாக புதுச்சேரி மாறியுள்ளது. சின்னஞ்சிறிய மாநிலமாக இருந்தாலும், அனைவரும் வியக்கும் அளவிற்கு, ஆண்டிற்கு 5.50 லட்சம் சுற்றுலா பயணிகள் புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களுக்கும் வருகின்றனர்.
இதில், தலைநகரான புதுச்சேரிக்கு மட்டும் 4.50 லட்சம் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால், புதுச்சேரி நகரப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
குறிப்பாக, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல, நகரத்தில் பொது கழிப்பிடங்கள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இது, நகரத்தை சுகாதாரமாகவும், துாய்மையாகவும் பராமரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
'புல்வார்டு' என அழைக்கப்படும் கடற்கரை சாலை, அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, சுப்பையா சாலை ஆகிய சாலைகளுக்கு இடையிலான நகரப் பகுதியில் பொது கழிப்பிடங்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது. கழிப்பறைகளை லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.
கடற்கரை சாலையில் பழைய வடிசாராய ஆலை மற்றும் டூப்ளெக்ஸ் சிலை அருகே கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதேபோல் ஆம்பூர் சாலையில் கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிக்கின்ற கடற்கரையில் கழிப்பிடங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதே உண்மை.
கழிப்பிடங்களின் பராமரிப்பும் படுமோசமாக உள்ளது. பல இடங்களில் உள்ளே யாரும் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், எந்தந்த பகுதிகளில், எவ்வளவு தொலைவில் கழிப்பிடங்கள் உள்ளன என்பது குறித்து எந்த அறிவிப்பு பலகையும் எங்கும் இல்லை.
இது, வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அலைச்சலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளது. கழிப்பிடங்களை தேடி அலையும் அவலம் நிலவுகிறது.
இதன் காரணமாக, அவசர இயற்கை உபாதைக்கு திறந்தவெளியையும், சாலையோரங்களையும் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கும், நெருக்கடிக்கும் சுற்றுலா பயணிகள் தள்ளப்படுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
புதுச்சேரி மாநிலம், கடந்த 2018ம் ஆண்டில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பெருமையை, பொது இடங்களில் போதுமான எண்ணிக்கையிலான கழிப்பிடங்கள் இல்லாததால் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசுக்கு, சுற்றுலாவே மிகப் பெரிய வருவாயை ஈட்டி தருகிறது. எனவே, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல, கூடுதலான கழிப்பிட வசதிகளை பொது இடங்களில் ஏற்படுத்தி தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போது இருக்கின்ற கழிப்பிடங்களை மேம்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அவற்றை, மணிக்கு ஒருமுறை துாய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிரந்தர கழிப்பிடம் கட்ட முடியாத இடங்களில், நடமாடும் கழிப்பிடங்களை (மொபைல் டாய்லட்) வைக்க வேண்டும். நகரப் பகுதியில் எந்தந்த இடங்களில், எவ்வளவு துாரத்தில் கழிப்பிடங்கள் உள்ளன என்பதை கியூஆர்.கோடுடன் கூடிய அறிவிப்பு பலகையை ஆங்காங்கே வைக்க வேண்டும்.

