ஐ.ஏ.எஸ்.,களுக்கு எதிராக வழக்கு: அரசு அனுமதி தர காலதாமதம் ஏன்? விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஐ.ஏ.எஸ்.,களுக்கு எதிராக வழக்கு: அரசு அனுமதி தர காலதாமதம் ஏன்? விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : டிச 16, 2025 05:14 AM

சென்னை: இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக, வழக்கு தொடர அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து, தமிழக பொதுத்துறை செயலர் விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார். சென்னை, கோவை மாநகராட்சிகளில், உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு சாலை பணிகளுக்கான டெண்டர் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அமல்படுத்தவில்லை
ஆரம்பகட்ட விசாரணையை, லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தி அரசிடம் அறிக்கை அளித்தது. அதைத்தொடர்ந்து, வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி, கே.விஜயகார்த்திகேயனுக்கு எதிராக, வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதத்துக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அதிகாரிகள், முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற்ற நிலையில், இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி பெறுவதற்கு மட்டும் ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது?
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கோரிய ஆவணங்கள் மீது, தமிழக அரசின் பொதுத்துறை செயலர், 20 மாதங்களுக்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டசவசமானது.
என்ன பயன்?
தேர்தல்களின் போது, 'ஆட்சிக்கு வந்தால், ஊழல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறாமல், வழக்கின் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை சேகரித்து என்ன பயன்?
இதன் காரணமாக, வழக்கு விசாரணையை நீதிமன்றம் துவங்க முடியாத நிலை உள்ளது. இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து, தமிழக அரசின் பொதுத்துறை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்.
அதேபோல, வழக்கு தொடர அனுமதி கோரி ஆவணங்களை அனுப்பியதுடன் நின்றுவிடாமல், அதன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நினைவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்பது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர், விஜிலன்ஸ் கமிஷனர் ஆகியோரும் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, ஜன., 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

