/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்பெருமானை உள்ளத்தில் கொள்வோம்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
/
எம்பெருமானை உள்ளத்தில் கொள்வோம்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
எம்பெருமானை உள்ளத்தில் கொள்வோம்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
எம்பெருமானை உள்ளத்தில் கொள்வோம்: ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
ADDED : டிச 22, 2025 05:32 AM

புதுச்சேரி: ஆத்ம சமர்ப்பணம் செய்து எம்பெருமானை உள்ளத்தில் கொள்ள வேண்டும் என, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம் செய்தார்.
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மார்கழி திருப்பாவை மகோற்சவத்தில், நேற்றைய ஆறாம் நாளில் அவர், நிகழ்த்திய உபன்யாசம்:
ஆறாம் பாசுரம் முதல் 15ம் பாசுரம் வரை உள்ள பத்து பாசுரங்கள், முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் ஆண்டாள் அருளியுள்ளாள்.
உள்ளுரைப் பொருளாக, இப்பாசுரம் முதல் 15ம் பாசுரம் வரை உள்ள பத்து பாசுரங்கள், ஆண்டாள், மதுரகவியாழ்வார் தவிர்த்து மற்ற பத்து ஆழ்வார்களை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சிப் பாசுரங்களாக அருளப்பட்டுள்ளன.
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து என்று திருவாய் மொழியில் நம்மாழ்வார் அருளியுள்ளதை அனுசரித்து, ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையின் 6ம் பாசுரம் தொடங்கி 15ம் பாசுரம் வரை ஆழ்வார்களை ஆசார்யர்களாகப் பாவித்து, அவர்களை முன்னிட்டு அவர்கள் பின்னால் நாம் போக வேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் வகையில், ஆழ்வார்களைத் துயிலெழுப்புவதாக அனுபவிக்க வேண்டும்.
பகவானிடம் ஆசார்யர்கள் மூலமாகத் தான் சரணாகதி பண்ண வேண்டும் என்பது தானே நம் வைஷ்ணவ சித்தாந்தம். இதைத்தானே ராமாயணமும் காட்டுகிறது. பரதன் ராமனைக் காட்டிலிருந்து அழைத்து வரச் சென்றபோது தான் மட்டும் தனியே போகாமல், வசிஷ்டாதி புரோஹிதர்கள் உள்ளிட்ட பலரையும் அழைத்துச் சென்று, ராமனிடம், “உன் தாஸனான, பக்தனான, உன் சோதரனான என் கோரிக்கையை ஏற்று மீண்டும் நாட்டிற்கு வந்து அரசுரிமையை ஏற்க வேண்டும்” என்றல்லவா பரதன் பிரார்த்தித்தான் என்பதை இங்கு மனத்தில் கொள்ள வேண்டும்.
நம் மனக் கோவிலில் மாதவனாகிய நாராயணனை உள் நிறுத்தி, பக்தி என்ற பூவிட்டு முனிவர்களும் யோகிகளும் எம்பெருமானை உள்ளத்துக் கொண்டது போல் கொள்ள வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் பெரியாழ்வார் என்பதால், இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வாருக்கு திருப்பள்ளி எழுச்சி பாடி, அவரைத் தன் நோன்புக்கு வழிகாட்ட வேண்டினாள் என்றும் அனுபவிக்கலாம்.
உள்ளம் என்ற கோவிலிலே குடியிருக்க நீ வரவேண்டும் என்று பகவானை உருகி அழைத்தால், குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும் என்று பகவான் கேட்பானாகில், ஆத்ம சமர்ப்பணம் என்னும் வாடகை தருவேன் என்று உருகி எம்பெருமானை உள்ளத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

