விஜயை வைத்து வியாபாரம் பார்க்க ஆசை? தினகரன், பன்னீரால் கூட்டணி இழுபறி!
விஜயை வைத்து வியாபாரம் பார்க்க ஆசை? தினகரன், பன்னீரால் கூட்டணி இழுபறி!
ADDED : டிச 28, 2025 03:56 AM

சென்னை: விஜயை வைத்து தேர்தல் செலவுகளை சரிகட்ட தினகரன், பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதால், கூட்டணி பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது.
தமிழகத்தில் 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக, தன் தலைமையில் கூட்டணி அமைக்க, த.வெ.க., தலைவர் விஜய் முயற்சித்து வருகிறார்.
தன் கூட்டணியில் இணையும் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பையும், ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 100 நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது. ஆனால், த.வெ.க., கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. தி.மு.க., தன் கூட்டணியில் உள்ள கட்சிகளை தக்கவைத்துக் கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது; புதிய கட்சிகளை கூட்டணியில் இழுக்கவும் பேச்சு நடத்தி வருகிறது.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என, இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் விரும்புகின்றனர்.
ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பிடிவாதத்தால், பா.ஜ.,வுடன் நெருக்கமாக இருந்த அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டார்.
அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர முயற்சித்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் கதவு அடைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும், த.வெ.க., கூட்டணியில் இணைய பேச்சு நடத்தி வருகின்றனர். தேர்தல் செலவு தொடர்பாக முடிவு எட்டப்படாததால், கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதுகுறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதால், த.வெ.க., கூட்டணியில் இணைவதை தவிர, அ.ம.மு.க.,வுக்கு வேறு வழியில்லை. பன்னீர்செல்வத்தை இழுக்க, தி.மு.க., தரப்பில் பேச்சு நடத்தப்படுகிறது.
தி.மு.க., கூட்டணியில் இணைந்தால், தன் அரசியல் குரு ஜெயலலிதா வகுத்து கொடுத்த பாதையில் இருந்து விலகி விட்டதாக, சொந்த சமுதாய மக்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என பன்னீர்செல்வம் அஞ்சுகிறார்.
இதனால், அவரும் த.வெ.க.,வுடன் கூட்டணி அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த இரண்டு கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கு, விஜயும் விரும்புகிறார்.
ஆனால், கூட்டணியில், அ.ம.மு.க.,விற்கு 30 'சீட்'களும், பன்னீர்செல்வத்தின் அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்திற்கு, 10 'சீட்'களும் கேட்கப்படுகின்றன.
கூட்டணியில் இணைய வேட்பாளரின் செலவுக்கு, கணிசமான தொகை கேட்கப்பட்டு வருகிறது. இதனால் விஜய் கடும் குழப்பத்தில் உள்ளார்.
இந்த விஷயத்தில் பன்னீரும், தினகரனும் இறங்கி வரும் பட்சத்தில், கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.

