சும்மா இருந்து சம்பளம் வாங்கும் 200 ஆசிரியர்கள்; மாதம் ரூ.1.80 கோடி அரசு நிதி வீணடிப்பு
சும்மா இருந்து சம்பளம் வாங்கும் 200 ஆசிரியர்கள்; மாதம் ரூ.1.80 கோடி அரசு நிதி வீணடிப்பு
ADDED : டிச 28, 2025 03:42 AM

சென்னை: அரசினர் குழந்தைகள் இல்லங்களில் கற்பிக்கும் பணியை மேற்கொள்ளாமல், கடந்த ஏழு மாதங்களாக, 200 ஆசிரியர்கள் ஊதியம் பெற்று வருவது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை கீழ், பெற்றோரை இழந்த மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை பராமரிக்க, 36 அரசினர் குழந்தைகள் இல்லங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 1,287 குழந்தைகள் தங்கியுள்ளனர்.
அவர்களுக்கு கல்வி கற்பிக்க, ஒவ்வொரு இல்லத்திலும், தலா ஒரு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
பெரும் சர்ச்சை இங்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 200 இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், பணிபுரிந்து வருகின்றனர்.
அரசினர் குழந்தைகள் இல்லங்களில், எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும் மாணவர்கள், உயர்நிலை கல்விக்கு, பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்படும், அரசு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களில் பலர், அரசு பள்ளி மாணவர்களுடன் சகஜமாக பழகவும், சமூகத்தில் ஒருங்கிணைந்து வாழவும் சிரமப் படுகின்றனர்.
எனவே, நடப்பாண்டு முதல் குழந்தைகள் இல்லத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும், அரசு பள்ளிகளுக்கு மாற்ற, அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் முதல், அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கி படித்த மாணவர்கள், வெளி பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு, கடந்த ஏழு மாதங்களாக, அங்கு படித்து வருகின்றனர்.
ஆனால், அங்கு பணிப்புரிந்த 200 ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படவில்லை.
கடந்த ஏழு மாதங்களாக, அவர்கள் மாணவர்கள் இல்லாத பள்ளிகளுக்கு தினசரி வருகை தருவதும், கற்பிக்கும் பணியை மேற்கொள்ளாமல் ஊதியம் பெறுவதும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரவு இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
அரசினர் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள 1,287 மாணவர்களில், 993 பேர் ஏற்கனவே வெளி பள்ளிகளில், உயர்நிலை வகுப்புகளில் படித்து வருகின்றனர்.
மீதமுள்ள 294 மாணவர்களையும், பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு மாற்றி, சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன், கடந்த ஜனவரி யில் உத்தரவிட்டார்.
நடவடிக்கை
அதன்படி, கடந்த ஜூன் முதல் குழந்தைகள் இல்லங்களில் உள்ள அனைத்து மாணவர்களும், வெளி பள்ளிக்கு மாற்றப்பட்டு, அங்கு படித்து வருகின்றனர். இரவில் தங்க மட்டுமே, இல்லத்திற்கு வருகின்றனர்.
ஆனால், இங்கு பணியாற்றிய 200 ஆசிரியர்கள், தற்போது வரை வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படவில்லை.
வேலை எதுவும் இல்லாமல், அவர்களுக்கு மாதம் 1.80 கோடி ரூபாய், அரசு ஊதியம் வழங்குவது வேதனையாக உள்ளது.
எனவே, சமூக நலத்துறை செயலர், பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல், அவர்களை பள்ளிக் கல்வித்துறை கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

