கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றுவோர்; முதல்வர் மீது விஜய் பாய்ச்சல்
கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றுவோர்; முதல்வர் மீது விஜய் பாய்ச்சல்
UPDATED : செப் 15, 2025 10:00 AM
ADDED : செப் 15, 2025 03:33 AM

சென்னை: 'விஜய் வெளியே வரவே மாட்டான்; மக்களை சந்திக்கவே மாட்டான் என்றவர்கள், இப்போது வெவ்வெறு விதங்களில் புலம்ப துவங்கி உள்ளனர்' என, த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'உங்கள் விஜய்; நான் வரேன்' என்ற மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்து தந்த, திருச்சியில் துவங்கினோம். எளிதாக கடந்து விடும் துாரத்தை கூட, மக்கள் கடலில், பல மணி நேரம் நீத்தியே, கடக்க வேண்டிய சூழல் இருந்தது. இதை, நாடும் நன்றாகவே உணர்ந்தது. நம் கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும், இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்.
'விஜய் வெளியே வரவே மாட்டான்; மக்களை சந்திக்கவே மாட்டான்' என, ஆள் வைத்து கதையாடல் செய்தவர்கள், இப்போது, வெவ்வேறு விதங்களில் புலம்பத் துவங்கி உள்ளனர். இதை, முன்கூட்டியே ஒப்புக் கொள்வது போலத்தான், தங்களது கதறலை, முப்பெரும் விழா என்ற கடிதம் வாயிலாக, வெளிப்படுத்தி இருந்தனர்.
புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல், அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது. வெறுப்பையும், விரக்தியையும் வடிவமைத்த வார்த்தைகள், அந்த கடிதத்தில் அழுது கொண்டிருந்தன. வெளியே கொள்கை என்று பேசுவதும், உள்ளுக்குள்ளே பா.ஜ.,வோடு உறவாடுவதும் யார் என, மக்கள் புரிந்து கொள்ள துவங்கி விட்டனர்.
எனவே, கொள்கை கூப்பாடு போட்டு ஏமாற்றிக் கொண்டே, கொள்ளை அடிப்போர் யார் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன. எம்.ஜி.ஆரை, அரசியல் அரிச்சுவடி தெரியாதவர் என்றும், வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக் கொண்டிருப்பவர் என்றும், தங்கள் மனதில் மண்டி கிடந்த வெறுப்பு, நெருப்பை கக்கியவர்கள், இன்று மட்டும் மாறிவிடுவரா? மக்கள் சக்தியுடன் களம் காணும், த.வெ.க.வை எப்படி குறை கூறாமல் இருப்பர்.
யார், எத்தனை கூப்பாடு போட்டாலும், எப்படி கதறினாலும், எத்தகைய வெறுப்பை கக்கினாலும், நாம் முன்னேறி செல்வோம். உயரிய அடிப்படை கோட்பாட்டோடு, மத சார்பற்ற, சமூக நீதி என்ற மகத்தான கொள்கையோடு, பாதை வகுப்போம். 2026 சட்டசபை தேர்தலில் 1967 மற்றும் 1977 தேர்தல்களில், நிகழ்ந்ததை போல, மிகப்பெரிய வெற்றியை மக்கள் சக்தியின் பேராதரவுடன், த.வெ.க. நிச்சயம் நிகழ்த்திக் காட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.