மோசமான வானிலையால் விமான சேவை பாதிப்பு; இன்று 67 இண்டிகோ விமானங்கள் ரத்து
மோசமான வானிலையால் விமான சேவை பாதிப்பு; இன்று 67 இண்டிகோ விமானங்கள் ரத்து
ADDED : டிச 25, 2025 07:25 PM

புதுடில்லி: மூடுபனி மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்று மட்டும் 67 விமானங்களின் சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது.
நாடு முழுவதும் பரவலான மூடுபனி மற்றும் மோசமான வானிலை காரணமாக, உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அகர்தலா, சண்டிகர், டேராடூன், வாரணாசி மற்றும் பெங்களூரு போன்ற விமான நிலையங்களில் முன்னறிவிக்கப்பட்ட மோசமான வானிலை காரணமாக 67 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
விமானிகளுக்கான அதிக ஓய்வு நேரம் தொடர்பான விதிகள் காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் இம்மாத தொடக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. நெருக்கடியைக் கவனத்தில் கொண்டு, டிஜிசிஏ, இணை டிஜி சஞ்சய் பிரஹமானே மற்றும் துணை டிஜி அமித் குப்தா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மற்றும் சிஓஓ இசிட்ரே போர்குராஸ் ஆகியோரை இந்தக் குழு ஏற்கனவே விசாரித்துள்ளது. இந்தக் குழு இந்த வார இறுதிக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தான் இண்டிகோ விமானங்களின் சேவை மெல்ல மெல்ல மீண்டும் இயல்புக்கு திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

