சிந்தனைக்களம்: தேசியத்தின் கவிதை...நவீன இந்தியாவின் சிற்பி
சிந்தனைக்களம்: தேசியத்தின் கவிதை...நவீன இந்தியாவின் சிற்பி
UPDATED : டிச 25, 2025 11:17 AM
ADDED : டிச 25, 2025 04:03 AM

இன்று (டிசம்பர் 25) வாஜ்பாய் நூற்றாண்டு
இந்திய அரசியல் வானில் துருவ நட்சத்திரமாக மின்னியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். கவிஞராக, சிறந்த பார்லிமென்ட்வாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த அவரது 100-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நுாறாவது ஆண்டின் துவக்கத்தில், நாம் அவரை நினைவு கூர்வது, இந்திய அரசியல் வரலாற்றின் பொற்காலத்தை மீட்டெடுப்பதாகும். அவரது வாழ்வும், சாதனைகளும் இன்றைய தலைமுறைக்கு ஒரு பாடப்புத்தகம்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அவர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றான காஷ்மீரில், வாஜ்பாய் பங்கேற்ற பொதுக் கூட்டத்திற்கு சிறிது நேரத்திற்கு முன், ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இச்சம்பவத்தால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது. ஆனால், பிரதமர் வாஜ்பாய் சற்றும் சலனமடையாமல், அந்தச் சம்பவத்தை ஒரு சாதாரண நிகழ்வு போல கடந்து சென்று, திட்டமிட்டபடி கூட்டத்தில் பங்கேற்றார்.
அவர் தன் உரையில், 'குண்டு வெடிப்புகள் எங்களை அச்சுறுத்தாது; இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம்' என்று உறுதியளித்தார். அவரது இந்த நெஞ்சுரம் மிக்க அணுகுமுறை, தேசத்தின் உறுதியை உலகிற்கு வெளிப்படுத்தியது.
பண்பாட்டு வேர்களை தொட்டவர்
கடந்த 1999 கார்கில் போரின்போது பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானி கே.நசிகேதனை, பிரதமர் வாஜ்பாய் மனிதாபிமான ராஜதந்திரம் வாயிலாக மீட்டு வந்தார். நசிகேதன் மீண்டு வந்ததும், நாட்டு மக்களிடையே வாஜ்பாய் உரையாற்றியபோது, இந்தச் சம்பவத்தை புராணக் கதையுடன் ஒப்பிட்டார்.
ஹிந்து புராணத்தில், கடினமான சத்தியத்தைப் பெறுவதற்காக பாதாள உலகம் சென்ற ஒரு இளம் பாத்திரத்தின் பெயரும் நசிகேதன் தான்.
வாஜ்பாய் மீண்டு வந்த விமானியைப் பார்த்து, 'நீயும் நசிகேதன். ஆனால், நீ எமனிடம் இருந்து மீண்டு வரவில்லை; மாறாக நீ, எமன் போன்ற பாகிஸ்தானிடம் இருந்து, அவன் விரும்பாத சத்தியமான மனிதாபிமானத்தை மீட்டு வந்துள்ளாய்' என்று புகழாரம் சூட்டினார்.
இந்த ஒப்பீடு, வழக்கமாக அரசியல் தலைவர்கள் பேசாதது. ஆனால், வாஜ்பாய் இந்திய பண்பாட்டு வேர்களை தொட்டு பேசினார்.
எட்டு மகத்தான சாதனைகள்
வாஜ்பாய் ஆட்சிக் காலமான 1998- -- 2004, இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மாற்றியமைத்த காலம். அவரது முக்கிய சாதனைகள்...
'பொக்ரான்- - 2' அணுசக்தி சோதனை:
கடந்த 1998-ல் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றி, தேசப் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்.
தங்க நாற்கர சாலை திட்டம்:
சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டா ஆகிய நான்கு பெருநகரங்களை இணைக்கும் பிரமாண்ட சாலைக் கட்டமைப்பை உருவாக்கி, பொருளாதாரப் புரட்சி செய்தார்.
கார்கில் போர் வெற்றி:
'ஆப்பரேஷன் விஜய்' வாயிலாக பாகிஸ்தான் ஊடுருவலை முறியடித்து, இந்திய எல்லையை காத்து நின்றார்.
சர்வ சிக்ஷா அபியான்:
'அனைவருக்கும் கல்வி' என்ற திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கான கட்டாய கல்வியை உறுதி செய்தார்.
பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் மூலம் குக்கிராமங்களையும் தரமான சாலைகளால் இணைத்து, கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முகத்தையே மாற்றினார்.
புதிய தொலைத்தொடர்பு கொள்கை வாயிலாக, இந்தியாவில் சாமானியர்களுக்கும் மொபைல் போன் வசதி கிடைக்க அடித்தளமிட்டார்.
இந்தியாவின் நிலவு பயணத்திற்கான 'சந்திரயான்' திட்டத்தை 2003-ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, விண்வெளி ஆய்வில் வேகம் கொடுத்தார்.
மத நல்லிணக்கமும் வெளியுறவு கொள்கையும்:
'நண்பர்களை மாற்றலாம்; அண்டை வீட்டாரை மாற்ற முடியாது' என்ற தத்துவத்தின் அடிப்படையில், பாகிஸ்தானுடன் பேருந்து போக்குவரத்து துவங்கி, அமைதி பயணத்திற்கு முயன்றார்.
ஒரு ஓட்டில் தோல்வி
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பிரதமர் பதவியைத் துறந்த அவரது கண்ணியமும், மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து வணங்கிய அவரது பண்பாடும், அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிமனித ஒழுக்கத்தை அவர் கொண்டிருந்ததைக் காட்டுகின்றன.
'நான் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்; என் தனித்துவத்தை விற்க மாட்டேன்' என்ற அவரது உறுதிமொழி, காங்கிரஸ் ஆதிக்கம் நிறைந்த காலத்தில் அவர் கடைப்பிடித்த அரசியல் துாய்மைக்கு சான்றாக அமைந்தது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒரு நந்தவனமாக நேசித்த அந்த மகா மனிதரின், 100வது பிறந்த நாளில், அவர் காட்டிய நேர்மை, வளர்ச்சியை நினைவுகூர்ந்து வணங்குவோம்.
வாஜ்பாய் வகுத்த வழியில் பிரதமர் மோடி பீடு நடையிட்டு சிறப்புற செயலாற்றி வருகிறார் என்பது, இந்தியரான நம் அனைவருக்கும் பெருமையான விஷயம்.

- கஸ்துாரி, திரைப்பட நடிகை, மாநில செயலர், பா.ஜ., கலை, கலாசார பிரிவு

