த.வெ.க., கூட்டணியில் இணைய 10 'சீட்'; பேரத்தை துவக்கினார் பன்னீர்செல்வம்
த.வெ.க., கூட்டணியில் இணைய 10 'சீட்'; பேரத்தை துவக்கினார் பன்னீர்செல்வம்
ADDED : டிச 25, 2025 04:33 AM

சென்னை: த.வெ.க., கூட்டணியில் இணைய, 10 'சீட்' கேட்டு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ரகசிய பேச்சை துவக்கி உள்ளார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அக்கட்சியில் இணைய தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்தார். அவரை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க, பா.ஜ.,வும் முயற்சித்தது.
ஆனால், அவரையும், அவரது ஆதரவாளர்களையும் சேர்க்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மறுத்து விட்டார். இதனால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பழனிசாமியை வீழ்த்த முடிவு செய்துள்ளனர். நேற்றுமுன்தினம் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், ஆலோசனை நடத்தினார்.
அப்போது, வரும் தேர்தலில் த.வெ.க., உடன் கூட்டணி வைக்கலாமா அல்லது தி.மு.க., உடன் கூட்டணி வைக்கலாமா எனக் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு நிர்வாகிகள் அனைவரும், த.வெ.க., கூட்டணியில் இணைந்து, தேர்தலை சந்திப்போம் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது:
அ.தி.மு.க.,வில் இணைய பன்னீர்செல்வம் கடைசிவரை முயற்சித்தார். ஆனால், அதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டதால், விஜயுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளார். கூட்டணியில் 10 தொகுதிகள் தர வேண்டும் என, விஜயிடம் கேட்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் மற்றும் ஆனந்த் வாயிலாக, பேச்சு நடந்து வருகிறது.
தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில், பன்னீர்செல்வம் தரப்பு பெரிய முதலீடு செய்துள்ளது. அதை திரும்ப தர கட்டுமான நிறுவனம் காலம் தாழ்த்தி வருகிறது. ஆளும்கட்சி தரப்பில் அதை பெற்று தர உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதற்கு தங்களுடன் கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. எனினும் கட்சி நிர்வாகிகள், த.வெ.க., கூட்டணியை வலியுறுத்தி உள்ளதால், அவர் அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு அதிகம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

