sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

டில்லியில் த.வெ.க., நிர்வாகிகளிடம் பல மணி நேரம் சி.பி.ஐ., விசாரணை

/

டில்லியில் த.வெ.க., நிர்வாகிகளிடம் பல மணி நேரம் சி.பி.ஐ., விசாரணை

டில்லியில் த.வெ.க., நிர்வாகிகளிடம் பல மணி நேரம் சி.பி.ஐ., விசாரணை

டில்லியில் த.வெ.க., நிர்வாகிகளிடம் பல மணி நேரம் சி.பி.ஐ., விசாரணை

3


UPDATED : டிச 30, 2025 06:00 AM

ADDED : டிச 30, 2025 05:22 AM

Google News

3

UPDATED : டிச 30, 2025 06:00 AM ADDED : டிச 30, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் கூட்ட நெரிசலில், 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, டில்லியில் உள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்தில் நடந்த விசாரணைக்கு, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகள் ஆஜராகினர். அத்துடன், கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் அம்மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் ஆஜராகினர். அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பாக, விரைவில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த செப்டம்பர் 27ல், கரூர் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ., அதிகாரிகள், கரூருக்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், அங்கேயே சில நாட்கள் முகாமிட்டு, பலரையும் அழைத்து விசாரித்தனர். த.வெ.க., பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரை, கரூரில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு ஏற்கனவே வரவழைத்து விளக்கம் கேட்டனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரையும், டில்லி உள்ள தலைமை அலுவலகத்திற்கு நேரில் வரும்படி, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியிருந்தது. அதனை ஏற்று இந்த நால்வரும், நேற்று டில்லியில் உள்ள சி.பி.ஐ., தலைமை அலுவலகத்திற்கு நேற்று வந்திருந்தனர். காலை, 10:00 மணியளவில் வந்து சேர்ந்த அவர்களை, வாயிலில் இருந்த அதிகாரிகள், உடனடியாக, உள்ளே அழைத்து சென்றனர். மதிய உணவுக்கு அவர்களை வெளியில் விடுவர் என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் நடக்கவில்லை. மாறாக, பல மணி நேரமாக நாள் முழுவதும் நீண்ட விசாரணை நடந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது;

த.வெ.க., நிர்வாகிகளிடம் மதிய உணவு இடைவேளை தவிர, மற்றபடி நாள் முழுதுமே விசாரணை நடைபெற்றது. கரூரில் சம்பவம் நடைபெற்ற அன்று நிகழ்ந்த அனைத்து விபரங்களும், பல்வேறு தரப்பிலிருந்தும் கிடைக்கப் பெற்று, அவை முறையாக தொகுக்கப்பட்டு, ஏற்கனவே சி.பி.ஐ., அதிகாரிகளிடம் இருந்தது. அத்துடன், மொபைல்போன் உரையாடல்கள், 'சிசிடிவி' காட்சிகள் என அனைத்தும் சி.பி.ஐ., வசம் இருந்தால், அதனடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டு, த.வெ.க., நிர்வாகிகளிடம் பதில்கள் பெறப்பட்டன.

தமிழகம் முழுதும் சனிக்கிழமை தோறும் பல மாவட்டங்களுக்கு விஜய் செல்ல திட்டமிடப்பட்டு, முதலில் ஒரு அட்டவணை வெளியிடப்பட்டதே. பின்னர் ஏன் அது கைவிடப்பட்டு, திடீரென கரூர் செல்ல முடிவெடுத்தார்; அந்த முடிவை எடுத்தது யார், தற்செயலாக நடந்ததா அல்லது அதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதா?

விஜய் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு, அனுமதி கேட்பதற்காக போலீசாரிடம் சென்ற போது, அங்கு நிகழ்ந்த உரையாடல்கள், நெரிசல் நிகழ்வதற்கு முன் போலீசாரின் அறிவறுத்தலை ஏற்காமல் புறக்கணித்தது உண்மையா; அப்படியானால் அதற்கான காரணம் என்ன என்பது உட்பட, பல கேள்விகள் கேட்கப்பட்டன.

கரூர் கூட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்கள் வந்தனரா. அவர்களை அழைத்து வரும்படி யார் ஏற்பாடு செய்தது என்பன போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டன. குறிப்பாக, ஆதவ் அர்ஜுனாவிடம் தான் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.

சம்பவம் நடைபெற்ற பிறகு, சில நாட்களாக எங்கு தலைமறைவாக இருந்தீர்கள், யார் உங்களுக்கு அடைக்கலம் தந்ததனர் என்பது போன்ற கேள்விகள் புஸ்சி ஆனந்த்திடம் கேட்கப்பட்டன. இதுபோலவே நிர்மல் குமார் மற்றும் மதியழகன் ஆகியோரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து கேள்விகள் கேட்கப்பட்டாலும், சில நேரங்களில் அனைவரையும் ஒன்றாக அமர வைத்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

இதுதவிர, கரூர் கலெக்டர் தங்கவேலு, எஸ்.பி., ஜோஷ்தங்கையா, ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்த், டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பட்டிருந்ததால், அவர்களும் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களில் வந்திருந்தனர்.

அவர்களிடம், வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்தது ஏன், கரண்ட் கட் செய்யப்பட்டது, கூட்டத்திற்கு வந்திருந்தோரின் எண்ணிக்கை, பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கையில் நிலவிய குழப்பம் மற்றும் சென்னையில் உயர் அதிகாரிகள் நடத்திய நிருபர்கள் சந்திப்பு போன்றவை குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.

தேவைப்பட்டால் மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்றும், அனைவரிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள விசாரணை சூழ்நிலையை வைத்து, முதற்கட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யலாமா என்ற ஆலோசனைக்கும், சி.பி.ஐ., அதிகாரிகள் வந்துள்ளனர் என்றே தெரிகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

'இன்றும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்'

காலை, 10:00 மணிக்கு சி.பி.ஐ., அலுவலகம் உள்ளே சென்று விட்டு, இரவு, 8:00 மணியளவில் வெளியே வந்த நிர்மல்குமார், அங்கிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:
எங்களுக்கு வந்திருந்த சம்மனை ஏற்று, நாங்கள் விசாரணைக்காக வந்தோம். அதிகாரிகளிடம் எங்களுக்கு தெரிந்த விஷயங்களை விளக்கமாக அளித்தோம். விசாரணையின் போது, எங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன என்பது குறித்து, வெளிப்படையாக கூறுவது சரியாக இருக்காது. அவர்கள் கேட்ட அனைத்துக்கும் நாங்கள் பதிலளித்தோம்.
கரூர் சம்பவம் எதற்காக நடந்தது என்பது உலகத்திற்கே தெரியும். ஊடகங்களும் மிகப்பெரிய சாட்சியாக இருந்தன. அங்கிருந்த மக்கள் அனைவருக்குமே, இந்த விவகாரம் குறித்து தெரியும். மீண்டும் இன்று வரச் சொல்லியிருக்கின்றனர். இன்னும் சில விளக்கங்கள் தேவை என்றும் கூறியுள்ளனர். எனவே, அதன்படி, இன்னொரு முறை வந்து விளக்கம் அளித்துவிட்டுச் செல்ல உள்ளோம்.
தி.மு.க., ஆதரவு ஊடகங்கள், இந்த விசாரணை குறித்து உண்மைக்கு மாறாக, அரசியல் ரீதியாக மாற்றும் வகையில், எங்களுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. விஜயை முதல்வர் ஆக்குவது என்ற எங்கள் நோக்கத்தில், எந்தவிதமான மாற்றமும் இல்லை. எங்கள் வசம் இருந்த வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.



-நமது டில்லி நிருபர்-






      Dinamalar
      Follow us