'முதல்வராக விஜயை ஏற்றால் மட்டுமே கூட்டணி': செங்கோட்டையன்
'முதல்வராக விஜயை ஏற்றால் மட்டுமே கூட்டணி': செங்கோட்டையன்
ADDED : டிச 30, 2025 07:08 AM

கோவை: ''விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் தான் கூட்டணியில் இணைய முடியும், ஜனவரி முதல் வாரத்தில் அனைத்தும் தெரியும்,'' என, கோவையில் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவையில் அளித்த பேட்டி: த.வெ.க., தலைவர் மலேசியா சென்றிருந்தார். உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டிருந்தது மலேசிய நிகழ்ச்சி. மலேசியாவில் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களுக்கு மட்டும்தான் ரோடு ஷோ அனுமதி வழங்கப்படும். ஆனால் விஜய்க்கு ரோடு ஷோ அனுமதி வழங்கி உள்ளது.
இளம் வயது 18 முதல் பெண்கள், பெரியவர்கள் வரை விஜய்க்கு ஆதரவு பெருகி வருகிறது. ஆர்ப்பரித்து வருகின்ற, அலை மோதுகிற கூட்டம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின் விஜய்க்கு வந்துள்ளது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்த மாற்றம், மக்கள் சக்தியோடு இணைந்து முதல்வர் ஆவது நிறைவேறும்.
காங்., கட்சியுடன் தொடர்ந்து கருத்துகள் பரிமாறப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கிறது. பொதுவாக ஒரு புதிய இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். விஜயை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் தான் கூட்டணியில் இணைய முடியும். பொறுத்திருங்கள், ஜனவரி முதல் வாரத்தில் அத்தனையும் தெரியும். எல்லோரும் வாழ வேண்டும், எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

