போலி டாக்டர்களின் சொத்துக்களை முடக்க அரசுக்கு பரிந்துரை
போலி டாக்டர்களின் சொத்துக்களை முடக்க அரசுக்கு பரிந்துரை
ADDED : செப் 09, 2025 02:16 AM

தமிழக கிராமப்புறங்களில் மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்த, சொத்துக்களை முடக்கினால் மட்டுமே தீர்வு ஏற்படும்' என, தமிழக அரசுக்கு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுக்கு, 200க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் அதிகபட்சம் ஆறு மாதம் வரை சிறையில் இருக்கின்றனர். வெளியே வந்ததும், மற்றொரு இடம் அல்லது அதே இடத்தில் மீண்டும் மருத்துவம் பார்க்கின்றனர்.
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அதனால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் அவர்கள் பதிவு செய்ய முடியவில்லை.
அவர்கள் மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் என்றாலும், மருத்துவ சேவையாற்ற தகுதியற்றவர்கள். அவர்கள் மருத்துவம் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும்.
அதேபோல, இந்திய மருத்துவ முறை படித்தவர்கள், அலோபதி மருத்துவம் பார்ப்பதும் தவறு. இது போன்றவர்களும் மருத்துவம் பார்ப்பது கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில், போலி டாக்டர் என கண்டறிந்து கைது செய்யப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
தமிழக அரசு பரிசீலித்து, அதற்கான சட்ட திருத்தத்தை அமல்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.