நிர்மலா சீதாராமனை சந்திக்க பன்னீர், தினகரன், செங்கோட்டையன் திட்டம்
நிர்மலா சீதாராமனை சந்திக்க பன்னீர், தினகரன், செங்கோட்டையன் திட்டம்
ADDED : செப் 11, 2025 04:32 AM

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்குமாறு குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பொறுப்புகளை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பறித்துள்ளார். எனினும், செங்கோட்டையன் முயற்சிக்கு, பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் முழு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்நிலையில் பா.ஜ., கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்த பன்னீர்செல்வம் மற்றும் தினகரனை சமரசப்படுத்தி, மீண்டும் கூட்டணியில் சேர்க்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் பீஹாரில், தேர்தல் பணிகளில் அமித் ஷாவின் முழு கவனம் இருக்கிறது.
எனவே, தமிழகத்தில் பா.ஜ., சார்பாக நடைபெறும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் பொறுப்பு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 21ம் தேதி, திண்டுக்கலில் நடக்க உள்ள பா.ஜ., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகிறார்.
அப்போது, அவரை பன்னீர்செல்வம், செங்கோட்டையன், தினகரன் ஆகிய மூவரும் சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். அந்த சந்திப்பின்போது, நிர்மலாவுடன் மூவரும் பேசி, முக்கிய முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -
- நமது நிருபர் -