தனியார் கல்லுாரி மாணவர்களுக்கும் இலவச 'லேப்டாப்' வழங்க முடிவு
தனியார் கல்லுாரி மாணவர்களுக்கும் இலவச 'லேப்டாப்' வழங்க முடிவு
ADDED : டிச 27, 2025 04:52 AM

- நமது நிருபர் -:
தனியார் கல்லுாரிகளில், அரசின் சிறப்பு திட்டத்தில் பயன்பெறும், மாணவ - மாணவியருக்கும், இலவச 'லேப்டாப்' வழங்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வி கற்க செல்லும் மாணவ - மாணவியருக்கு, இலவச 'லேப்டாப்' வழங்கும் திட்டம், 2019ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது.
கொரோனா காலக்கட்டத்தில், இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு பின், இந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
விறுவிறுப்பு
தமிழக அரசின் 2025 - 26ம் நிதியாண்டு பட்ஜெட்டில், 'தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், இன்ஜி., டிப்ளமா வேளாண்மை, மருத்துவம் உட்பட, அனைத்து கல்லுாரிகளிலும் படிக்கும், மாணவ - மாணவியருக்கு, முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளில், 20 லட்சம் 'டேப்லெட்' அல்லது 'லேப்டாப்' வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதற்காக, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
'லேப்டாப்' கொள்முதல் செய்வதற்காக, தமிழக அரசின் எல்காட் நிறுவனம், கடந்த மே மாதம் சர்வதேச டெண்டர் கோரியது. பல முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. இவற்றில், 'ஏசர்' மற்றும் 'டெல்' நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.
ஏசர் நிறுவனம், ஒரு 'லேப்டாப்' 23,385 ரூபாய் விலையில், 14 அங்குல திரையுடனும், டெல் நிறுவனம் ஒரு லேப்டாப் 40,828 ரூபாய் விலையில், 15.6 அங்குல திரையுடனும் வழங்க ஒப்புதல் அளித்தன.
முதல் கட்டமாக, 10 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், இறுதியாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு படிக்கும், மாணவ - மாணவியருக்கு, இலவச 'லேப்டாப்' வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தை, வரும் ஜன., 5ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். அதற்கான பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன.
கூடுதல் செலவு
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், கல்லுாரி மாணவர்களைப் போல், தனியார் கல்லுாரி களை சேர்ந்த மாணவ - மாணவியருக்கும், இலவச 'லேப்டாப்' வழங்க ஆலோசிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தனியார் கல்லுாரியில், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் வாயிலாக, மாதந்தோறும் 1,000 ரூபாய் பெறும், மாணவ - மாணவியர்; கல்வி உதவித் தொகை பெறும் மாணவ - மாணவியர் ஆகியோருக்கு, இலவச 'லேப்டாப்' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, கூடுதலாக எவ்வளவு செலவாகும், எவ்வளவு மாணவர்கள் உள்ளனர் என, உயர் கல்வித்துறை கணக்கெடுத்து வருகிறது. விரைவில், இதற்கான அரசாணை வெளியாகும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

