ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்: தி.மு.க.,வுக்கு மீண்டும் குடைச்சல்
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்: தி.மு.க.,வுக்கு மீண்டும் குடைச்சல்
ADDED : செப் 15, 2025 01:08 AM

“ஆட்சியில் பங்கு கேட்போம்; 25 தொகுதிகள் தந்தால் ஏற்க முடியாது,” என, தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் கூறியதற்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், ஆதரவு அதிகரித்து வருவதால், தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18ல் வெற்றி பெற்றது.
முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், தங்களுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக, அப்போதே காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில், முணுமுணுப்புகள் எழுந்தன.
உரிய மரியாதை எனவே, வரும் சட்டசபை தேர்தலில், கூடுதல் தொகுதிகளை, தி.மு.க., கூட்டணியில் பெற வேண்டும் என்ற கோரிக்கை, அக்கட்சியில் வலுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராஜேஷ்குமார் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
நடிகர் விஜய் கட்சி துவக்குவதற்கு முன், ராகுலை சந்தித்து பேசினார். அவர், காங்கிரசில் இணையும் மனநிலையில் இருந்தார். அவருக்கு இளைஞர் காங்., தலைவர் பதவி கொடுக்க காங்கிரஸ் விரும்பியது.
ஆனால், வயது விதிமுறை காரணமாக, பதவி கொடுக்க முடியாமல் போனது. அவர் இப்போதும் ராகுலின் செயல்பாட்டை பாராட்ட தவறவில்லை. ராகுல் கைது செய்யப்பட்டதும் கண்டனம் தெரிவித்தார்.
கூட்டணி என்பது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுகிறது. 'இண்டி' கூட்டணியில், தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
ஆனால், கேரளாவில் காங்கிரசை எதிர்த்து கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. அது அந்த மாநில அரசியல். வரும் 2026ல் தமிழகம் சந்திப்பது, மாநில சட்டசபை தேர்தல்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் உரிய மரியாதையை எதிர்பார்க்கிறது. கடந்த காலங்களைப் போல காங்., தொடர்ந்து செயல்பட முடியாது. அதனால், இம்முறை காங்கிரசுக்கு 25 தொகுதிகள் வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பீஹார் தேர்தல் முடிந்ததும், ராகுல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். அதன்பின், தமிழக அரசியலில் காங்.,கின் தேர்தல் கணக்குகள் முழுமையாக மாறும்.
கடந்த 1967க்கு பின், தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது, காங்கிரஸ் தொண்டன் ஒவ்வொருவரின் எண்ணமாக இருக்கிறது.
திரண்ட கூட்டம் அதை நிறைவேற்றி கொடுக்க வேண்டிய கடமை, கட்சி தலைவர்களுக்கு உள்ளது. தமிழக காங்கிரசின் நிலவரத்தை, கட்சி மேலிட பொறுப்பாளர்களிடம் தெரிவித்து உள்ளோம்.
கூட்டணி பேச்சு நடக்கும் போது, அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். மேலிடம் எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படுவோம்.
இவ்வாறு ராஜேஷ்குமார் கூறினார்.
ராஜேஷ்குமார் இதற்கு முன்பும் இதே போலவே பேட்டி அளித்திருந்தார். தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, நடிகர் விஜயுடன் கூட்டணி சேர வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருக்கிறது.
திருச்சியில் நடந்த நடிகர் விஜயின் பிரசார கூட்டத்துக்கு திரண்ட கூட்டத்தை கண்ட பின், ராஜேஷ்குமாரின் கருத்தை காங்., கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் ஏற்றுக்கொண்டு கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே லோக்சபா எதிர்கட்சித் தலைவராக ராகுல் பதவி ஏற்ற போது, அவருக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்துக்கு, ராகுலும் நன்றி தெரிவித்தார். அந்த விஷயங்களை, காங்கிரசார் தற்போது சுட்டிக்காட்டி வருகின்றனர்.
- நமது நிருபர் -