வேர்கள் வளர்க்கப்பட்டால் கிளைகள் இயற்கையாகவே வளரும்
வேர்கள் வளர்க்கப்பட்டால் கிளைகள் இயற்கையாகவே வளரும்
ADDED : செப் 15, 2025 01:51 AM

பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., ஊழியர்களை அமைப்பின் இதயமாகக் கருதுபவர். அவர்களை வளர்ப்பது, பயிற்சி அளிப்பது, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, அவரது முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஓர் அமைப்பின் உண்மையான பலம், அதன் ஊழியர்களின் திறன், ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பில் உள்ளது என்று அவர் நம்புகிறார்.
கடந்த 1970-களின் முற்பகுதியில், நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் 'ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரசாரக்' ஆனார். 1977ல் அவசரநிலைக்கு பின், 'விபாக் பிரசாரக்' என்ற பொறுப்பில், அவர் திறமையான அமைப்பாளராக உருவெடுத்த போது, அவரது பணிமுறை , ஊழியர்களை உருவாக்கு வதில் வேரூன்றியது.
குஜராத்தில், 1980-களின் முற்பகுதியில், ஆர்.எஸ்.எஸ்., மிகவும் குறைவாகவே பரவியிருந்த காலகட்டம். ஒரு வட்டத்தில் ஒரு, 'ஷாகா' அதாவது கிளை அமைப்பது கூட பெரிய சாதனையாக கருதப்பட்டது. ஆனால், மோடிக்கு வித்தியாசமான பார்வை இருந்தது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு, 'ஷாகா' இருக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு கிளையையும் அமைப்பதற்கான பொறுப்பை ஒரு ஊழியரிடம் ஒப்படைத்து, அவ்வப்போது முன்னேற்ற அறிக்கைகளை பெறுவார். -
தலைமை பயிற்றுவிப்பாளர் யார்? என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; யார் வரவில்லை என ஒவ்வொரு விபரமும் கவனமாக கண்காணிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ்., 1985-ல், 60 ஆண்டுகளை நிறைவு செய்த போது, கர்ணாவதியில் ஒரு பெரிய முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 5,000 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதன் துவக்கத்தில், கிராமம் கிராமமாக மோடி சென்று, இளைஞர்களை சந்தித்து, ஆர்.எஸ்.எஸ்., சீருடைகள் வாங்க அவர்களை ஊக்குவித்தார்.
இதன் விளைவாக, நுாற்றுக்கணக்கான புதிய இளைஞர்கள் முகாமிற்கு வந்தது மட்டுமின்றி, அந்த அமைப்பில் நிரந்தரமாக இணைந்தனர். இது, குஜராத் பிரிவுக்கு புதிய சக்தியை ஊட்டியது. பெரிய அளவிலான ஊழியர் கட்டமைப்பின் தொடக்கத்தை குறித்தது.
அவரது பயிற்சி, அமைப்பின் உறுப்பினர்களாக மட்டுமின்றி, சமூகத்தில் முன்மாதிரியான பிரதிநிதிகளாகவும் ஊழியர்களை வடிவமைத்தது. கடினமான காலங்களிலும், துயரமான சம்பவங்களிலும், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, மோடி தனிப்பட்ட தார்மீக ஆதரவை வழங்கினார்.- இதை பல ஊழியர்கள் இன்றும் நன்றியுடன் நினைத்து பார்க்கின்றனர்.
கடந்த 1987-ல், குஜராத் பா.ஜ., அமைப்பு செயலரான போது, அரசியல் துறையிலும், அதே மாதிரி ஊழியர்களை உருவாக்கும் நடைமுறையை, மோடி முன்னெடுத்தார். 1980-களில் பா.ஜ., 'அமைப்பு விழா' வழியே ஆயிரக்கணக்கான புதிய ஊழியர்கள் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டனர். மோடியின் கண்ணோட்டம் எப்போதும் தெளிவாக உள்ளது.
அமைப்பின் உண்மையான பலம், அதன் ஊழியர்களிடம் தான் உள்ளது. ஒழுக்கம், அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஊழியர்கள், எந்த சூழ்நிலையிலும், தேச நலனை எல்லாவற்றுக்கும் மேலாக வைத்திருப்பர்.
அதனால் தான், இன்று இந்த அமைப்பு வெறும் அரசியல் சக்தியாக மட்டும் அல்லாமல், துடிப்பான கலாசார உணர்வாகவும் உள்ளது.
அவரது ஊழியர் மேம்பாட்டுப் பயணம், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நீடித்த செய்தியை வெளிப்படுத்துகிறது. வேர்கள் வளர்க்கப்பட்டால், கிளைகள் இயற்கையாகவே வளரும்; மரம் காலங்காலமாக வலுவாக நிற்கும்
பி.எல்.சந்தோஷ்
தேசிய பொதுச்செயலர், பாரதிய ஜனதா கட்சி .