UPDATED : செப் 13, 2025 08:04 AM
ADDED : செப் 13, 2025 04:11 AM

நாக்பூர்: ''இந்தியா வலிமையாக மாறினால் தங்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் தான், நம் நாட்டின் மீது வரிகள் விதிக்கப்பட்டன,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் அமெரிக்காவை மறைமுகமாக சாடினார்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தது. இதனால், நம் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று நடந்த பிரம்ம குமாரிகள் அமைப்பின், விஸ்வ சாந்தி சரோவர் அமைப்பின் ஏழாவது நிறுவன நாள் நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:
இந்தியா வலுவான நாடாக வளர்ந்தால், தங்களுக்கு என்ன நேரிடும்; தங்கள் சொந்த நிலை என்னவாகும் என உலக நாடுகள் பயப்படுகின்றன.
அதனால் தான் இந்தியப் பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆனால், நாங்கள் எதுவும் செய்யவில்லை. ஏழு கடல்களுக் கு அப்பால் இருந்தும், எந்த தொடர்பு ம் இல்லாத போதும், ஏன் எங்களை கண்டு அஞ்சுகிறீர்கள்?
மனிதர்களும், நாடுகளும் தங்கள் உண்மையான சுயத்தை புரிந்து கொள்ளாவிட்டால் தொடர்ந்து பிரச்னைகளை சந்திப்பர். மனிதர்கள், 'நான்' என்பதிலிருந்து 'நாம்' என்ற அணுகுமுறைக்கு மாறினால், அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் உலகப் பிரச்னைகளுக்கு தீர்வுகளை கண்டுபிடித்து, முன்னோக்கி செல்லும் வழியை காட்டும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. இந்தியா சிறந்தது; இந்தியர்களும் சிறந்தவர்களாக இருக்க பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.