கோவையில் வாங்கிய நிலத்தில் பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை விளக்கம்
கோவையில் வாங்கிய நிலத்தில் பால் பண்ணை அமைக்க போகிறேன்: அண்ணாமலை விளக்கம்
ADDED : செப் 13, 2025 03:13 AM

சென்னை: கோவையில் வாங்கிய நிலத்தில் பால் பண்ணை அமைக்கப் போவதாக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், காந்திபுரம் சார் - பதிவாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 11 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை வாங்கியுள்ளார். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு விளக்கம் அளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
என் அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு, சமூக நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனுக்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து, சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தின் மீதான என் ஆர்வத்தையும், எங்கள், 'வி த லீடர்ஸ்' அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும், பலர் அறிந்துள்ளனர்.
கடந்த ஜூலை 12ல், விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மை தான். இந்த நிலத்தை நான், என் மனைவி சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றை பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரு மாதங்களாக, என் வங்கி கணக்கு வாயிலாக, அந்த கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன்.
நிலத்தை பதிவு செய்யும் நாளில், நான் செல்லவில்லை என்று கூறுபவர்கள், ஒரு அசையா சொத்தை, 'பவர் ஆப் அட்டர்னி' வாயிலாக வாங்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜூலை 10ம் தேதி கோவை மாவட்டம், காளப்பட்டி பதிவு அலுவலகத்தில், என் மனைவி அகிலாவுக்கு, 'பவர் ஆப் அட்டர்னி' வழங்கப்பட்டது. இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக, தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு, முத்திரைத்தாள், இதர கட்டணம் என, 40.59 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளோம்.
மேலும், மத்திய அரசு திட்டத்தின் கீழ், ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் நான் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம், தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்கான என் வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாக சொன்னால், நான் இதுவரை வாங்கிய, முதல் மற்றும் ஒரே அசையா சொத்து இதுதான்.
நம் இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து உதவுவதன் வாயிலாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்கநிலை மற்றும் சிறு, குறு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் வாயிலாகவும், தங்கள் முதலீட்டு கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவுனத்தை துவக்கும் ஆரம்ப கட்ட பணியில் ஈடுபட்டு உள்ளேன்.
தமிழகத்தில் பா.ஜ., மாநில தலைவரானதில் இருந்து, கடந்த ஏப்., 2025 வரை, என் குடும்பத்துடன் செலவிட, எனக்கு மிக குறைந்த நேரமே கிடைத்தது. நானும், என் மனைவியும் நம் நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றில் இருந்து, வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளோம்.
தற்போது, என் குடும்பத்திற்காகவும், என் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கவும், சட்டத்திற்கு உட்பட்டு, நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில், சில ஆர்வக் கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால், அவர்களை கடவுள் காப்பாற்றட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.