அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு வருங்காலத்தில் இல்லாத சூழலுக்கு வாய்ப்பு
அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு வருங்காலத்தில் இல்லாத சூழலுக்கு வாய்ப்பு
UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 07:50 AM

கோவை:
கோவையில் சில அரசு பள்ளிகளில் மட்டுமே தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன. எதிர்காலத்தில் இப்பள்ளிகளிலும், இப்பிரிவு இல்லாத நிலை உருவாக வாய்ப்புள்ளது.
கோவை மாவட்டத்தில், 30 ஆண்டுகளுக்கு முன், 55 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப்பிரிவு இருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் வீதம் பணியாற்றினர். தற்போது சில பள்ளிகளில் மட்டுமே இப்பிரிவு செயல்படுகிறது. இங்கு பணிபுரியும் சில ஆசிரியர்கள், 2031 மற்றும் 2035க்குள் பணி நிறைவு பெற உள்ளனர். அதன்பின், இப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி மூடப்பட வாய்ப்புள்ளது.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூறுகையில், 'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களுக்காக, தொழிற்கல்வி பாடப்பிரிவை அரசு தொடங்கியது. பொது இயந்திரவியல் பயின்றால், பொறியியல் படிப்புக்கு செல்லலாம். மெட்ரிக் பள்ளிகளில் தற்போது இப்படிப்பு வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் இருக்கும் வரையே தொழிற்கல்வி பாடம் நடத்தப்படும்' என்றனர்.
ஏழை மாணவர்கள், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் பயனடையும் தொழிற்கல்வி இல்லாமல் போனால், அப்பிரிவினர் நிச்சயம் பாதிக்கப்படுவர்.
திறன் மேம்பாடு முக்கியம் கல்வியாளர்கள் கூறுகையில், 'பள்ளி கல்வி முதல் உயர் கல்வி வரை மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சியும், திறன் மேம்பாடும் முக்கியம் என தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. மாணவர்கள் வகுப்பறை பாடங்களுடன் சேர்த்து கைநுணுக்கப் பயிற்சி, தொழில் சார்ந்த பயிற்சி பெற வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்துறை நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப், செயல்முறை பயிற்சி, தொழில் தொடர்புகள் ஆகியவை கல்வி முறையில் சேர்க்கப்பட உள்ளன.
மாணவர்கள் தொழில்வாரியான கல்வி பயிற்சியில் ஈடுபடுவதை தேசிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது. அண்டை மாநிலங்களில் ஆறாம் வகுப்பு முதல் திறன் சார்ந்த கல்வி வழங்கப்படுவதோடு, அரசு சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் திறன் வளர்ச்சி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அங்கு மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி அளித்து, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றனர்.