நீலகிரிக்கு சிறப்பான திட்டங்கள் மாநில அமைச்சர் பெருமிதம்
நீலகிரிக்கு சிறப்பான திட்டங்கள் மாநில அமைச்சர் பெருமிதம்
UPDATED : டிச 20, 2025 08:54 AM
ADDED : டிச 20, 2025 08:55 AM
ஊட்டி:
'நீலகிரியில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளிலும், அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி உள்ளது,' என, அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
ஊட்டி அருகே எப்பநாடு ஊராட்சி பகுதியில், 2.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலை, தும்மனட்டி மற்றும் கக்குச்சி கிராமங்களில், 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நுாலகங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி, எப்பநாடு- கட்டபெட்டு இடையே, இடுஹட்டி பகுதியில், 3 கி.மீ., தொலைவில், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
அதேபோல, தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, கொந்தொரை மற்றும் கக்குச்சி கிராமங்களில், புதிய நுாலகங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ், தலா, 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய இரண்டு நுாலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா, கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

