UPDATED : செப் 11, 2025 12:00 AM
ADDED : செப் 11, 2025 08:34 AM

சென்னை:
பணி நிரந்தரம் கோரி, பள்ளிக்கல்வி இயக்குநரகம் அமைந்துள்ள, டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்ட சிறப்பாசிரியர்கள், 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ள, அறிவுத்திறன், செவித்திறன், கற்றல் குறைபாடு பாதிப்புடைய மாணவர்களை, மற்ற மாணவர்களுடன் இணைத்து கற்பிக்கும் வகையில், சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் வாயிலாக, மாதம் 25,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
அவர்கள், மாணவர்களின் பாதிப்பு களுக்கு ஏற்ப, சிறப்பு பயற்சி அளிப்பதுடன், சிறப்பு கருவிகளின் வாயிலாக, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகின்றனர். சிறப்பு மாணவர்களை கையாளும் நுணுக்கங்கள் குறித்து, பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
தமிழகம் முழுதும், கடந்த 2002 முதல் பணியில் ஈடுபட்டுள்ள, 1,700 சிறப்பாசிரியர்கள், தங்களுக்கு இ.பி.எப்., மருத்துவ விடுப்பு, மருத்துவ சலுகைகள் உள்ளிட்டவற்றுடன், நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர்.
நேற்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., அலுவலகம் முன், சிறப்பாசிரியர்கள் 100 பேர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.