மொபைல்போன் எண் பதிவேற்றுவதில் சிக்கல்; இணையதள பிரச்னையால் அவதி
மொபைல்போன் எண் பதிவேற்றுவதில் சிக்கல்; இணையதள பிரச்னையால் அவதி
UPDATED : மே 18, 2024 12:00 AM
ADDED : மே 18, 2024 10:34 AM

உடுமலை:
இணையதள வேக குறைவினால், அரசுப்பள்ளி மாணவர்களின் மொபைல் எண்களை சரிபார்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
தற்போது கல்வியாண்டு நிறைவடைந்து, அரசுப்பள்ளிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில், மாணவர்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
மாணவர்களின் விபரங்களில், பெற்றோரின் மொபைல் எண்களும் பதிவிடப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுக்கும் நேரங்களில் அல்லது பள்ளி தொடர்பான தகவல்கள், தேர்ச்சி முடிவுகள் என அனைத்தும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது.
தற்போது, பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளத்தில் உள்ள மாணவர்களின் மொபைல் எண்களை சரிபார்க்கவும், மாற்றம் செய்வதற்கும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இம்மாத இறுதி வரை மட்டுமே, இப்பணிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இணையதளம் மிகவும் வேகம் குறைவாக இருப்பதால், மொபைல் எண்களை புதுப்பிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களின் மொபைல் எண்களை ஒடிபி வைத்து சரிபார்க்கவும், மாற்றம் இருக்கும் பட்சத்தில், புதிய மொபைல் எண்களை பதிவிடுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது விடுமுறையாக இருப்பதால், பெரும்பான்மையான பெற்றோர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் மொபைல் போன்களை எடுப்பதில்லை.
இதில் பணிக்குச்செல்வோரும் அதிகமாக இருப்பதால், அவர்களும் எடுப்பதில்லை. இணைதளத்தின் வேகம் மிக குறைவாக உள்ளது. இதனால், மொபைல் போனுக்கு ஒடிபி எண் இயக்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
அந்த ஒடிபி பெற்றோரின் மொபைல் போனுக்கு வந்தவுடன், அதை ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கும் இணையதளம் வேலை செய்வதில்லை. மீண்டும், மீண்டும் ஒடிபி இயக்க வேண்டி வருகிறது. இதனால் பெற்றோரும் அதிருப்தியடைகின்றனர்.
இப்பணிகளை முடிப்பதற்கு, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

