நாளிதழ் விற்பனை அதிகரிப்பு: ஏ.பி.சி., அமைப்பு அறிக்கை
நாளிதழ் விற்பனை அதிகரிப்பு: ஏ.பி.சி., அமைப்பு அறிக்கை
UPDATED : செப் 11, 2025 12:00 AM
ADDED : செப் 11, 2025 06:30 PM

புதுடில்லி:
நம் நாட்டில் நாளிதழ்களின் வினியோகம், கடந்தாண்டின் இரண்டாம் பகுதியை விட, நடப்பாண்டின் முதல் பகுதியில் 2.77 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ஏ.பி.சி., எனப்படும், பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் உள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்களின், 'சர்குலேஷன்' எனப்படும், வினியோகம் தொடர்பாக தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை, ஏ.பி.சி., எனப்படும், பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய் து வருகிறது.
அதன்படி, 2025, ஜனவரி - ஜூன் வரையிலான காலக்கட்டத்திற்கான தணிக்கை அறிக்கையை ஏ.பி.சி., வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
கடந்தாண்டு, ஜூலை - டிச., வரை நாடு முழுதும் 2 கோடியே 89 லட்சத்து 41,876 நாளிதழ் பிரதிகள் விற்பனையாகின. 2025ன் முதல் பகுதியான ஜன., - ஜூன் வரை, 2 கோடியே 97 லட்சத்து 44,148 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இது, 8 லட்சத்து 2,272 பிரதிகள் அதிகம். கடந்த ஆண்டின் இரண்டாம் பகுதியை விட 2.77 சதவீதம் அதிகம்.
அதேபோல், வாராந்திர நாளிதழ்கள் 2024, ஜூலை - டி ச., வரையிலான காலக்கட்டத்தில், 16 லட்சத்து, 61,643 பிரதிகள் விற்கப்பட்டன. 2025, ஜன., - ஜூன் வரையிலான காலக்கட்டத்தில், 16 லட்சத்து 13,769 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இது, கடந்தாண்டு இரண்டாம் பகுதியை விட 2.88 சதவீதம் குறைவு.
'மேகசீன்' எனப்படும், வார, மாத பத்திரிகைகள், 2024, ஜூலை - டிச., வரை 3 லட்சத்து 34,713 பிரதிகள் விற்கப்பட்டன. இந்தாண்டில், ஜூன் மாதம் இறுதி வரை, 2 லட்சத்து 55,776 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன.
இது, கடந்தாண்டு இரண்டாம் பகுதியை விட 23.58 சதவீதம் குறைவு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.