மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத்தேர்வு 'கீ ஆன்சர்' வெளியீடு
மதுரை காமராஜ் பல்கலை பிஎச்.டி., நுழைவுத்தேர்வு 'கீ ஆன்சர்' வெளியீடு
UPDATED : செப் 13, 2025 12:00 AM
ADDED : செப் 13, 2025 08:44 AM

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் ஓராண்டுக்கு முன் நடத்தப்பட்ட பிஎச்.டி., நுழைவுத் தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வு 2024, செப்., 22ல் நடந்தது. இதில் தேர்ச்சி பெற மாணவர்கள் சிலரிடம் பல்கலை அலுவலர்கள் பணம் பெற்றதா க பேராசிரியர், ஆராய்ச்சி மாணவர்கள் சார்பில் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதன்படி இப்பல்கலை பேராசிரியர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அது முழுமையாக இல்லை என சர்ச்சையானது. இதற்கிடையே நுழைவுத் தேர்வு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. 800க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் முறைகேடு புகார் காரணமாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் தாக்கலாகி விசாரணையில் உள்ளது.
சிறப்பு விசாரணை குழு விசாரித்து 'கீ ஆன்சர்' வெளியிட பரிந்துரைத்தது. இதன்படி ஏற்கனவே வெளியான சில விடைகளில் திருத்தம் செய்யப்பட்டது. ஒவ்வொரு பாடத்திற்கான விடைக் குறிப்புகளை தலா 2 சப்ஜெக்ட் வல்லுநர்கள் மதிப்பீடு செய்து, நேற்றுமுன்தினம் திருத்தப்பட்ட கீ ஆன்சர் விபரம் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து பல்கலை ஆராய்ச்சி பிரிவு பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'கீ ஆன்சர் வெளியிட்டதையடுத்து விரைவில் பிஎச்.டி., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.