ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு 15 முதல் விண்ணப்பிக்கலாம்
ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு 15 முதல் விண்ணப்பிக்கலாம்
UPDATED : செப் 13, 2025 12:00 AM
ADDED : செப் 13, 2025 08:42 AM

புதுச்சேரி :
அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள 190 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி பிராந்தியங்களில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள பி.எஸ்.டி., ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதி காலை 10 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன. அடுத்த மாதம் 14ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து அடுத்த மாதம் 27ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பள்ளி கல்வித் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
புதுச்சேரி, காரைக்காலை பொருத்தவரை 181 ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் பொது-72, எம்.பி.சி., - 32, எஸ்.சி.,-28, ஓ.பி.சி.,-20, இடபுள்யூ.எஸ்.,-3, முஸ்லீம்-4, பி.டி.,-2, எஸ்.டி.,-2 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடாக 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள. மாகி பிராந்தியத்தில் மொத்தம் 9 ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவை, பொது-3, எஸ்.சி.,-2, எஸ்.சி.,-4 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடாக 1 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலால், அங்கீகரிக்கப்பட்ட இரண்டாண்டு டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்வி முடித்து இருக்க வேண்டும். டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்வியில் தமிழ், மலையாளத்தை ஒரு பாடத்தை எடுத்து படித்து இருக்க வேண்டும். இல்லையெனில் அடிப்படை ஆசிரியர் கல்வியை அந்தந்த பிராந்திய மொழிகளில் படித்து இருக்க வேண்டும்.
தகுதி மதிப்பெண் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு, கர்நாடகா ஆசிரியர் தகுதி தேர்வு, ஆந்திர பிரதேச ஆசிரியர் தகுதிய தேர்வு, மத்திய ஆசிரியர் தகுதி எழுதியவர்களுக்கு தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் பொது பிரிவு, இடபுள்யூ.எஸ்., 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்து இருந்தால் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம் பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் அதாவது 82 மதிப்பெண் எடுத்திருந்தால் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி.,பி.டி., மாற்றுத்திறனாளிகள் 50 சதவீதம், அதாவது 75 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு விண்ணப்பதாரர் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், பி.டி., 3 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் எனில், பொது, இடபுள்யூ.எஸ்., பிரிவினருக்கு 10 ஆண்டுகள், ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், பிடி., பிரிவினர்களுக்கு 13 ஆண்டுகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 15 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு என, அறிவிக்கப்பட்டுள்ளது.