சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மனிதநேய 41 மாணவர்கள் தேர்ச்சி
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மனிதநேய 41 மாணவர்கள் தேர்ச்சி
UPDATED : டிச 10, 2023 12:00 AM
ADDED : டிச 10, 2023 11:07 AM
சென்னை:
மத்திய அரசு வெளியிட்ட சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவில், மனிதநேயம் பயிற்சி மைய 41 மாணவர்கள், பிரதான தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகம் வாயிலாக, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ - மாணவியரும் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயின்றோரில் 3,708 பேர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட நாட்டின் உயர் பதவிகளை வகிக்கின்றனர். இந்தாண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு, மத்திய பணியாளர் தேர்வாணையம் செப்டம்பரில் நடத்தியது. இதில் மனித நேய பயிற்சி மைய மாணவ - மாணவியர் 41 பேர் தேர்ச்சி பெற்றனர்.இதில், 20 மாணவர்கள், 21 மாணவியர். வெற்றி பெற்றவர்களுக்கு, மனிதநேயம் அறக்கட்டளை நிறுவன தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ - மாணவியருக்கும், மாதிரி நேர்முகத் தேர்விற்கான பயிற்சி, அறக்கட்டளை சார்பில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.நேர்முகத் தேர்வில் பங்கு பெறுவோர், புதுடில்லி சென்று வருவதற்கு விமான டிக்கெட், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில், தங்குவதற்கும், உணவிற்கும் ஏற்பாடுகள். தரமான காலணிகள், கோட் சூட், மாணவியருக்கு புடவை, சுடிதார் என அனைத்து உதவிகளும், எந்தவித கட்டணமின்றி மனிதநேயம் அறக்கட்டளை வழங்கும். மேற்கண்ட தகவல்களை சைதை துரைசாமி தெரிவித்தார்.
