பாதுகாப்பானதே:முட்டையில் புற்றுநோய்க்கான காரணிகள் ஏதுமில்லை;உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு
பாதுகாப்பானதே:முட்டையில் புற்றுநோய்க்கான காரணிகள் ஏதுமில்லை;உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு
UPDATED : டிச 21, 2025 10:06 AM
ADDED : டிச 21, 2025 10:07 AM

புதுடில்லி:
'முட்டைகள் புற்றுநோய் ஆபத்தை விளைவிப்பதாக பரவி வரும் தகவல்கள் தவறானவை; ஆதாரமற்றவை மற்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை. நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் மனித நுகர்விற்கு முற்றிலும் பாதுகாப்பானவை' என, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல, 'எகோஸ்' நிறுவனத்தின் முட்டைகளில், தடை செய்யப்பட்ட 'நைட்ரோபியூரான்' என்னும் 'ஆன்டிபயாடிக்' மருந்தின் தடயங்கள் இருப்பதாக, 'யு டியூப்' சமூக ஊடகத்தில் ஒருவர் ஆய்வக பரிசோதனை அறிக்கையுடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.
உற்பத்தி
அதில், 'கோழி, பன்றி, இறால் போன்ற உணவுக்காக வளர்க்கப்படும் விலங்குகளில் பாக்டீரியா தொற்றுகளை தடுக்க, நைட்ரோபியூரான் ஆன்டிபயாடிக் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
'அந்த உணவை மனிதர்கள் உண்ணும்போது, உடலில் நீண்ட காலம் தங்கி, புற்றுநோய் மற்றும் மரபணு சேதத்தை ஏற்படுத்துகிறது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட 'இகோஸ்' நிறுவனம், தங்கள் முட்டைகள், 100 சதவீதம் ஆன்டிபயாடிக் இல்லாமல் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தது .
இருப்பினும், முட்டையில் ஆன்டிபயாடிக் இருப்பது தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, அதை பயன்படுத்துவது தொடர்பாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தாமாக முன் வந்து, இந்த விவகாரத்தில் பரிசோதனை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
பரிசோதனை
நாடு முழுதும் உள்ள அனைத்து நிறுவன முட்டைகளின் மாதிரிகளையும் சேகரித்து, தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளதா என்பதை பரிசோதித்து அறிக்கை அனுப்ப, மண்டல அலுவலகங்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உத்தரவிட்டது.
இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் வாயிலாக, நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள முட்டைகளில் ஆன்டிபயாடிக் மருந்து இல்லை என தெரியவந்துள்ளது.
இது குறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கை:
உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள், 2011ன்படி, நம் நாட்டில் கோழி மற்றும் முட்டை உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் நைட்ரோபியூரான் பயன்படுத்துவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்பு
அதேபோல் 1 கிலோவுக்கு, 1 மைக்ரோகிராம் அளவிலேயே ஆன்டிபயாடிக் பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் அமலில் உள்ளது. இதை, நாட்டில் உள்ள அனைத்து உணவு தயாரிப்பு நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன.
முட்டைகள் தரமற்றவை என தனிப்பட்ட ஆய்வக கண்டுபிடிப்புகள் வாயிலாக முத்திரை குத்த முடியாது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனங்கள் வாயிலாகவும், அவற்றை பராமரிக்கும் மனிதர்களின் கவனக்குறைவு காரணமாகவும் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முட்டையில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் தனிப்பட்டவை. அவை, ஒட்டுமொத்த முட்டை வினியோகச் சங்கிலியின் தரத்தைப் பாதிக்காது.
முட்டையை உண்பதால் புற்றுநோய் அபாயம் ஏற்படும் என எந்தவொரு தேசிய அல்லது சர்வதேச சுகாதார ஆணையமும் தெரிவிக்கவில்லை; அறிவியல் பூர்வமாகவும் இது நிரூபிக்கப்படவில்லை.
சாதாரண முட்டை நுகர்வுக்கும், புற்றுநோய் அபாயத்திற்கும் இடையே எந்த நேரடி தொடர்பும் இல்லை என சர்வதேச சுகாதார அமைப்புகளின் ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.
விதிமுறை ஆய்வகங்களில் கண்டறியப்படும் மிகச்சிறிய அளவிலான வேதிப்பொருட்களின் தடயங்கள், உணவுப் பாதுகாப்பு விதிமீறலாகாது. இதனால், உடல்நல அபாயமும் இல்லை. உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க உற்பத்தி செய்யப்பட்டு உட்கொள்ளப்படும் முட்டைகள் மிகவும் பாதுகாப்பானவை.
தேவையற்ற வதந்திகளை நம்பாமல், சரிபார்க்கப்பட்ட அறிவியல் சான்றுகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளை பொதுமக்கள் நம்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விற்பனை சரிவு
முட்டை உண்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதன் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. முட்டை வாயிலாக தயாரிக்கப்படும் கேக்குகள், பப்ஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விற்பனையும் குறைந்துள்ளது. பேக்கரிகளிலும், முட்டை தொடர்பான உணவுப் பொருட்கள் தயாரிப்பதும் குறைந்துள்ளது. கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு என அடுத்தடுத்து கொண்டாட்டங்கள் களைகட்டும் நேரத்தில், கேக் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு குறைந்துள்ளதால் வியாபாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

