அனைத்து மொழி கல்வெட்டு தகவல்களை இணையதளம் வாயிலாக இனி அறியலாம்
அனைத்து மொழி கல்வெட்டு தகவல்களை இணையதளம் வாயிலாக இனி அறியலாம்
UPDATED : டிச 20, 2025 08:57 AM
ADDED : டிச 20, 2025 08:59 AM

சென்னை:
அனைத்து மொழிகளின் கல்வெட்டுகளையும், 'டிஜிட்டல்' எனப்படும் மின்னணு வடிவில் மாற்றும் பணி துவங்கி உள்ளது.
நாட்டில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுகளில், 70 சதவீதத்துக்கும் மேலானவை தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுடன், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளின் கல்வெட்டுகளும், கடந்த 100 ஆண்டுகளாக, மத்திய தொல்லியல் துறையால் கண்டறியப்பட்டுள்ளன.
அவற்றில் உள்ள எழுத்துகள், காகிதத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவை, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவின், ஊட்டி மற்றும் சென்னை அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டன. பின், கர்நாடக மாநிலம் மைசூருக்கு மாற்றப்பட்டன.
இந்நிலையில், 'பாரத் ஸ்ரீ' திட்டத்துக்காக, 2023 மத்திய பட்ஜெட்டில், 1 கோடி, 59 லட்சத்து, 93,664 ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கல்வெட்டு களஞ்சியம் என்ற கருவூலத்தை உருவாக்கும் திட்டமான, 'பாரத் ஸ்ரீ'யின்படி, மைசூருவில் உள்ள தென்மாநில கல்வெட்டியல் பிரிவில், அதற்கான பணிகள் நேற்று முன்தினம் துவங்கின.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் கூறியதாவது:
கல்வெட்டுகளில் இருந்து, காகிதத்தில் நகல் எடுக்கப்பட்ட எழுத்துகளை, டிஜிட்டல் மயமாக்கி இணையதளத்தில் பதிவேற்றுவதற்கான பணி துவங்கி உள்ளது.
இதில், 25,000க்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டு நகல்கள் உட்பட, 75,000 கல்வெட்டு எழுத்துகள், 'ஸ்கேன்' செய்யப்படும். அவை, ஒவ்வொரு வாரமும் பதிவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வெட்டு நகல் எடுப்பது எப்படி?
எளிதில் படிக்க முடியாத நிலையில் உள்ள கல்வெட்டு, செப்பேடு உள்ளிட்டவற்றின் மீது, ஈர காகிதத்தை ஒட்டி, அதன்மீது, நார் பிரஷால் ஒற்றி எடுப்பர். அப்போது, எழுத்துகள் வெட்டப்பட்ட பகுதி ஆழமாகவும், மற்ற பகுதிகள் மேடாகவும் இருக்கும். பின், கருப்பு நிற சிறப்பு மையை அதன் மீது ஒற்றி, காய்ந்ததும் எடுப்பர். அதில், எழுத்து பகுதி வெண்மையாகவும், கல்லின் மற்ற பகுதிகள் கருமையாகவும் இருக்கும். இதனால், கல்லில் பதிவான எழுத்துகளை எளிதாக படிக்க முடியும். இவற்றில் உள்ள தகவல்களை ஆராய்ந்து, கல்வெட்டு அலுவலர்கள் கட்டுரைகளாக எழுதுவர். அவை, 'இந்தியன் எப்பிகிராபி' எனும் இதழில் பதிப்பிக்கப்படும். ஆனால், 10 ஆண்டுகளாக, மத்திய தொல்லியல் துறையால், கல்வெட்டு தகவல்கள் பதிப்பிக்கப்படவில்லை. அதனால், ஆய்வாளர்கள், மைசூருக்கு நேரில் சென்று ஆராய வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் தான், 1887 முதல் சேகரிக்கப்பட்ட கல்வெட்டு நகல் காகித ஆவணங்களை, டிஜிட்டல் முறையில் பாதுகாக்கவும், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் எளிதில் ஆராயும் வகையிலும், மைசூரு பிரிவு அலுவலகத்தில் பிரத்யேகமான 'ஸ்கேனர்' கருவி வாங்கப்பட்டுள்ளது.

