இணை பேராசிரியர்களின் கோரிக்கை ஏற்றுக்கொண்டது வேளாண் பல்கலை 'தினமலர்' செய்தி எதிரொலி
இணை பேராசிரியர்களின் கோரிக்கை ஏற்றுக்கொண்டது வேளாண் பல்கலை 'தினமலர்' செய்தி எதிரொலி
UPDATED : செப் 14, 2025 12:00 AM
ADDED : செப் 14, 2025 07:57 AM

கோவை:
கோவை வேளாண் பல்கலையில் இரு நாட்கள் தர்ணா செய்த இணை பேராசிரியர்களின் கோரிக்கையை, பல்கலை நிர்வாகம் ஏற்றது. பதவி உயர்வு பெற, ஓராண்டுக்கு ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற நிபந்தனையை நீக்கி, விதிகளில் திருத்தம் செய்து, 10 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கின்றனர்.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பணிபுரியும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் எனில், ஆண்டுக்கோர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட வேண்டும் என்ற, புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது.
இந்நிபந்தனையை, பதவி உயர்வுக்கு பின்பற்றக்கூடாது என கூறி, துணைவேந்தர் அலுவலகம் முன் இணைப் பேராசிரியர்கள் இரு நாட்கள் தர்ணா செய்தனர்.
ஓராண்டுக்குள் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை என்பது, தரமற்ற ஆய்வுக்கே வழிவகுக்கும் என்பது சுட்டிக் காட்டப்பட்டது. யு.ஜி.சி., ஐ.சி.ஏ.ஆர்., விதிமுறைகளுக்கு உட்பட்டு, சி.ஏ.எஸ்., மதிப்பீட்டு முறையையே பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்த செய்தி, நம் நாளிதழில் படத்துடன் விரிவாக வெளியானது. இதையடுத்து, இக்கோரிக்கைகளை பல்கலை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இது குறித்து, இணை பேராசிரியர்கள் கூறியதாவது:
உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில், ஆண்டுக்கோர் ஆராய்ச்சிக் கட்டுரை என்ற நிபந்தனையைத் திரும்பப் பெறுவதாக, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிபந்தனையை திரும்பப் பெறுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றி, வேளாண் பல்கலை மேம்பாட்டுக் குழு ஒப்புதல் பெற வேண்டும். இதுவரை பின்பற்றிய நடைமுறையே பின்பற்றப்படும் என அறிவிக்க வேண்டும்.
அதிகபட்சம், 10 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.இந்நடைமுறையை மேற்கொள்ள, பல்கலை தரப்பில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் தரப்பில் மூன்று பேர் குழு அமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் சரிபார்க்கப்படும்.
இதில், 10 நாட்களுக்குள் சுமுக முடிவு எட்டப்படும் என நம்புகிறோம். அதுவரை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால் போராட்டம் மீண்டும் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.