180 கி.மீ., வேகத்தில் சீறிய 'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில்: ஆடாத தண்ணீர் டம்ளர்
180 கி.மீ., வேகத்தில் சீறிய 'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில்: ஆடாத தண்ணீர் டம்ளர்
ADDED : ஜன 01, 2026 12:43 AM

புதுடில்லி: நாடு முழுதும் பெரிய நகரங்களை இணைக்கும் 170க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்திலும் கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது உள்ள ரயில்களில், அமரும் வகையிலான இருக்கை வசதி உள்ளது.
இதற்கு பயணியர் இடையே கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, 'வந்தே பாரத் ஸ்லீப்பர்' ரயில் எனப்படும் படுக்கை வசதி உடைய ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது.
இந்த ரயில் பெட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல்., ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு உள்ளன.
இதற்கான வடிவமைப்பை சென்னையில் உள்ள ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலை நிறுவனம் வழங்கியுள்ளது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், நீண்ட துார இரவுப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஏசி படுக்கை வசதி, மோதலை தவிர்க்கும் உள்நாட்டு கவச் தொழில்நுட்பம், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது இரண்டு ரயில்கள் முழுமையாக தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் உள்ளன. ராஜஸ்தானின் கோட்டா -- நாக்டா பகுதியில் வந்தே பாரத் படுக்கை வசதி உடைய ரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்தது.
இந்த சோதனையில், ரயிலின் உள்ளே இருக்கும் மேஜையில் கண்ணாடி டம்ளர்களில் தண்ணீரை நிரப்பி வைத்திருந்தனர்.
அதன் அருகில் ரயிலின் வேகத்தை காட்டும் ஜி.பி.எஸ்., செயலி இயங்கியது. ரயில் 180 கி.மீ., வேகத்தில் சீறி பாய்ந்த போதும் டம்ளர்கள் அசையாமல் இருந்தன. அதில் உள்ள தண்ணீர் லேசான சலனத்தையே காட்டியது.
இந்த வீடியோவை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 'இது ரயிலின் உயர் தொழில்நுட்ப அமைப்பு மற்றும் வசதியான பயணத்தை உறுதிப்படுத்துகிறது' என குறிப்பிட்டுள்ளார்.

