UPDATED : ஜன 01, 2026 01:37 AM
ADDED : ஜன 01, 2026 12:26 AM

புதுடில்லி: புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில், தெரியாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், 'வாட்ஸாப், டெலிகிராம்' போன்ற சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம், புத்தாண்டு வாழ்த்து செய்திகள் பகிரப்படுகின்றன. இதை பயன்படுத்தி மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
வாட்ஸாப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களில், தெரியாத எண்களில் இருந்து வரும் புத்தாண்டு வாழ்த்து செய்திகளை திறந்து பார்க்க வேண்டாம்; குறுஞ்செய்திகளையும் பார்க்க வேண்டாம்.
அந்த செய்தியில், 'உங்களுக்கான புத்தாண்டு பரிசு இங்கே, உங்கள் பெயரைப் போட்டு வாழ்த்து அட்டையை உருவாக்குங்கள்' போன்ற வாசகங்களுடன் ஒரு லிங்க் இருக்கும். அதை நீங்கள் கிளிக் செய்தவுடன், அது ஒரு போலி இணையதளத்திற்கு சென்று, மோசடி செயலியை தானாகவே பதிவிறக்கம் செய்யும். இதன் மூலம், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

