மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்ட பயங்கரவாதி: மாணவர் போல் தங்கியிருந்து வெடிகுண்டு தயாரிப்பு
மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்ட பயங்கரவாதி: மாணவர் போல் தங்கியிருந்து வெடிகுண்டு தயாரிப்பு
UPDATED : செப் 21, 2025 04:44 AM
ADDED : செப் 21, 2025 01:35 AM

ராஞ்சி: ஜார்க்கண்டின் ராஞ்சியில் லாட்ஜ் ஒன்றின் அறையில் வெடிகுண்டு தொழிற்சாலை செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவர் போர்வையில் இளைஞர் ஒருவர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு வெடிகுண்டுகளை தயாரித்ததும், இதன் வாயிலாக மதத் தலங்களை தகர்க்கவும், பா.ஜ., மூத்த தலைவர்களை கொல்லவும் திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.
ஜார்க்கண்டின் ராஞ்சியில் இஸ்லாம் நகர் பகுதியில் தபராக் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள இந்த லாட்ஜில் ஏராளமான இளைஞர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் கல்லுாரிகளில் பயின்று வந்தனர்; பலர் வேலை க்கு சென்ற நிலையில் இங்கு தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த லாட்ஜில், வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுவதாக டில்லி போலீசார், ஜார்க்கண்ட் அரசுக்கு தகவல் அளித்தனர்.
சோதனை
இதையடுத்து, உள்ளூர் போலீசார் உதவியுடன், பயங்கரவாத தடுப்பு படையினர் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, அறை எண் 15ல், மாணவர் பெயரில் தங்கியிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
டில்லியில் கைது செய்யப்பட்ட அப்தாப் குரேஷி அளித்த தகவலின்படி, ராஞ்சி லாட்ஜில் வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், அங்கு தங்கியிருந்த அஷார் டேனிஷ் என்பவர் வெடிகுண்டுகளை தயார் செய்து, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர் பெயரில் தங்கியிருந்த அஷார், பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆள் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இங்கு தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள், இங்குள்ள சுபர்ணேகா நதி நீரில் வெடிக்கச் செய்து சோதிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அறையில் இருந்து ஏராளமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரிடம் பயிற்சி பெற்ற அஷார், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக பல முறை இந்த அறையில் ஆலோசனை செய்து உள்ளார்.
நாடு முழுதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டதுடன், பா.ஜ., மூத்த தலைவர்களை கொல்லவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அது மட்டுமின்றி, மத தலங்களை தகர்க்கவும் அவர்கள் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆள் சேர்ப்பு
அஷாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் அளித்த தகவலின்படி, வெடிமருந்து தயாரிப்பு மற்றும் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட 10க்கும் மேற்பட்டோரை கைது செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் மாநிலம் முழுதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஜார்க்கண்டில் வெடிமருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நாடு முழுதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. டில்லி, மும்பை உட்பட முக்கிய நகரங்களில், கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.